ADDED : செப் 16, 2026 11:05 PM
பெருங்களத்துார்: ஆட்டோவில் இளம்பெண்ணிடம் நான்கு பேர் கும்பலை அத்துமீறலில் ஈடுபட்டது, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அவர்களிடம் இருந்து தப்பிக்க, ஆட்டோவில் இருந்து குதித்த பெண், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பெருங்களத்துாரைச் சேர்ந்த 21 வயது பெண், வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம், வேலைக்கு செல்வதற்காக, ‘ரேபிடோ பைக்’ புக் செய்துள்ளார். வாகனத்தில் ஏறி புறப்பட்டு சிறிது துாரம் சென்றதும், பெட்ரோல் இல்லாமல் வாகனம் நின்றுவிட்டது.
பின், நடந்தே பெருங்களத்துார் ரயில் நிலையம் வரை சென்ற அப்பெண், அவ்வழியாக வந்த ஆட்டோ ஏறி பயணித்துள்ளார். சிறிது துாரம் சென்றதும், ஆட்டோவில் ஏறிய நான்கு பேர், அப்பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டதாக கூறப்படுகிறது.
அந்த நபர்களிடம் இருக்கு தப்பிக்க, அப்பெண் ஆட்டோவில் இருந்து கீழே குதித்துள்ளார். இதில், காயமடைந்த அப்பெண், வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக, பீர்க்கன்காரணை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
