/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ரூ.15 லட்சம் நுாதன மோசடி பலே பெண்ணுக்கு 'காப்பு'
/
ரூ.15 லட்சம் நுாதன மோசடி பலே பெண்ணுக்கு 'காப்பு'
ADDED : நவ 15, 2024 01:36 AM
கொளத்துார், வில்லிவாக்கத்தைச் சேர்ந்தவர் மகாலட்சுமி,41. தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்த இவருக்கு, உடன் பணிபுரிந்த கோகுல்ராஜ் என்பவரின் மனைவி சுஜித்ராவுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
சுஜித்ரா, கிண்டியிலுள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிவதாகவும், அந்த நிறுவனத்தில் பணம் முதலீடு செய்தால், பல மடங்கு லாபம் பார்க்கலாம் என, ஆசை வார்த்தை கூறியுள்ளார்.
இதை நம்பிய மகாலட்சுமி, மூன்று தவணைகளாக, 15 லட்சம் ரூபாயை, சுஜித்ராவிடம் கடந்தாண்டு அக்டோபரில் கொடுத்துள்ளார்.
இந்நிலையில், கூறியபடி பணம் எதுவும் திருப்பித் தராத நிலையில், கடந்த 15 நாட்களாக கோகுல்ராஜ், அவரது மனைவியை தொடர்பு கொள்ள முடியவில்லை.
கடந்த இரு நாட்களுக்கு முன், சுஜித்ரா கூறிய கிண்டியிலுள்ள நிறுவனத்தை பார்க்கச் சென்ற போது, அந்நிறுவனம் பூட்டப்பட்டிருந்தது.
தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த மகாலட்சுமிக்கு, இதேபோல் மேலும் பலர் ஏமாற்றப்பட்டதும் தெரிந்தது.
இதையடுத்து, கடந்த பிப்ரவரி இறுதியில், ராஜமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
சம்பந்தப்பட்டவர்களை போலீசார் தேடி வந்த நிலையில், தலைமறைவாக இருந்த சுஜித்ரா, 26, என்பவரை, மொபைல்போன் சிக்னலை வைத்து, கே.கே.,நகரில் நேற்று முன்தினம் மாலை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
தலைமறைவான கோகுல்ராஜ் மற்றும் இவர்களின் கூட்டாளிகளான முகமது நசுதீன், முகமது யூசுப் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.