/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சாஸ்திரி பவன் கழிப்பறையில் மயங்கி கிடந்த பெண்கள்
/
சாஸ்திரி பவன் கழிப்பறையில் மயங்கி கிடந்த பெண்கள்
ADDED : ஜூன் 16, 2025 02:32 AM
சென்னை:சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள சாஸ்திரி பவனில், மத்திய அரசின் வருமான வரித்துறை அலுவலகம் இயங்கி வருகிறது. இங்கு, துாய்மை பணி செய்துவரும் சாந்தி என்பவர், நேற்று காலை, 'ஆசிட்' ஊற்றி, கழிப்பறையை சுத்தம் செய்தார்.
அப்போது, 'ஆசிட்'டிலிருந்து வழக்கத்திற்கு மாறாக அதிக அளவில் புகை வெளியேறியதால், அதை சுவாசித்த சாந்தி சுயநினைவின்றி, கழிப்பறையினுள் மயங்கி விழுந்தார்.
சக ஊழியர்களான ரபியா, பாக்கியலட்சுமி ஆகிய இருவரும், சாந்தியை தேடி கழிப்பறைக்கு சென்றபோது, அவர்களும் 'ஆசிட்' புகை நெடியால் மூச்சுத்திணறி மயக்கமடைந்தனர்.
சிறிது நேரத்தில், கழிப்பறையை பயன்படுத்த வந்த பெண் ஊழியர், மூன்று துாய்மை பணியாளர்கள் மயங்கி கிடக்கும் விபரத்தை, அதிகாரிகளுக்கு கூறினார்.
இதையடுத்து, '108' ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு, சாந்தி, ரபியா, பாக்கியலட்சுமி ஆகிய மூவரும் ராயப்பேட்டை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
அவர்களுக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டதை தொடர்ந்து, மூவரும் இயல்பு நிலைக்கு வந்தனர். சம்பவம் குறித்து, ஆயிரம் விளக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.