/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
அடையாறு ஆற்றங்கரை ஆக்கிரமிப்புகள் அனகாபுத்துாரில் அகற்றும் பணி துவக்கம்
/
அடையாறு ஆற்றங்கரை ஆக்கிரமிப்புகள் அனகாபுத்துாரில் அகற்றும் பணி துவக்கம்
அடையாறு ஆற்றங்கரை ஆக்கிரமிப்புகள் அனகாபுத்துாரில் அகற்றும் பணி துவக்கம்
அடையாறு ஆற்றங்கரை ஆக்கிரமிப்புகள் அனகாபுத்துாரில் அகற்றும் பணி துவக்கம்
ADDED : மே 17, 2025 12:24 AM
அனகாபுத்துார் புறநகரில், மண்ணிவாக்கத்தை அடுத்த ஆதனுாரில் துவங்கும் அடையாறு ஆறு, மண்ணிவாக்கம், வரதராஜபுரம், அனகாபுத்துார், கவுல்பஜார் வழியாக, பட்டினப்பாக்கம் அருகே கடலில் கலக்கிறது.
ஆற்றின் அகலம், சீராக இல்லாமல் ஒவ்வொரு இடத்திலும் ஒரு அளவு உள்ளது. மற்றொரு புறம், பல இடங்களில் ஆற்றங்கரையை ஆக்கிரமித்து, ஏராளமான குடியிருப்புகள் கட்டப்பட்டன.
கடந்த 2015ல் ஏற்பட்ட பெரும் வெள்ள பாதிப்பை தொடர்ந்து, மண்ணிவாக்கம், வரதராஜபுரம், முடிச்சூர் பகுதிகளில் இருந்த அடையாறு ஆற்றின் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.
அனகாபுத்துாரில் டோபிகானா, தாய் மூகாம்பிகை, சாந்தி, காயிதே மில்லத், ஸ்டாலின், எம்.ஜி.ஆர்., நகர் பகுதிகளில், ஆற்றை ஆக்கிரமித்து, 700 குடியிருப்புகள், கடைகள் கட்டப்பட்டுள்ளது கண்டறியப்பட்டது.
அவற்றை அகற்ற நடவடிக்கை எடுத்த நீர்வளத்துறை, ஆக்கிரமிப்பாளர்களுக்கு பல முறை 'நோட்டீஸ்' வழங்கியது. செங்கல்பட்டு கலெக்டர் உத்தரவுப்படி, 2023, ஜூலையில், 20 கடைகள், 10 வீடுகளை வருவாய் மற்றும் நீர்வளத்துறையினர் இடித்து அகற்றினர்.
அப்போது, ஆக்கிரமிப்புகள் தொடர்பாக அளவீடு செய்தபோது, ஆற்றில் அளவீடு செய்யாமல், குடியிருப்புகளில் அளவீடு செய்வதாகக் கூறி, ஏராளமானோர் எதிர்ப்பு தெரிவித்து, சாலை மறியலில் ஈடுபட்டனர். சிலர், வீடுகளை காலி செய்தனர்.
அடையாறு ஆற்று ஆக்கிரமிப்பாளர்களுக்கு, தாம்பரம் - கிஷ்கிந்தா சாலையில் கட்டப்பட்டுள்ள நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பில் வீடுகள் ஒதுக்கப்பட்டன.
தொடர்ந்து, 2023, நவ., 4ல், போலீஸ் பாதுகாப்புடன், மாநகராட்சி, நீர்வளம் மற்றும் வருவாய் துறையினர் ஆக்கிரமிப்புகளை இடித்து அகற்றும் நடவடிக்கையில் இறங்கினர்.
இரண்டு நாட்களில், 80க்கும் மேற்பட்ட வீடுகள் இடிக்கப்பட்டன. அப்போது, ஆக்கிரமிப்பாளர்கள் அதிகாரிகளை முற்றுகையிட்டு, ரகளையில் ஈடுபட்டனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, 300க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர்.
சட்டம் - ஒழுங்கு பிரச்னை, உள்ளூர் அரசியல் தலையீடு, மாணவர்கள் படிப்பை கருத்தில் கொண்டு, ஆக்கிரமிப்பு அகற்றம் நிறுத்தப்பட்டு, கோடை விடுமுறையில் அகற்ற முடிவெடுக்கப்பட்டது.
இதற்கிடையில், எம்.ஜி.ஆர்., நகர் பகுதிவாசிகள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்நிலையில், நீதிமன்ற உத்தரவுப்படி ஆக்கிரமிப்புகளை இடித்து அகற்றும் பணியை, நீர்வளத்துறை இரு நாட்களில் துவங்க உள்ளது.
இது தொடர்பாக, அனைத்து துறை அதிகாரிகளுடனான ஆலோசனை கூட்டம், மாநகராட்சி கூட்ட அரங்கில், நேற்று நடந்தது.
மாநகராட்சி கமிஷனர் பாலச்சந்தர் தலைமையில் நடந்த கூட்டத்தில், நீர்வளத்துறை, வருவாய், போலீஸ், மின் வாரியம் உள்ளிட்ட துறையினர் பங்கேற்றனர். இதில், பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டதாக தெரிகிறது.