/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வேளச்சேரி வடிகால்வாய் ஜல்லடைகளில் மண் அடைப்புகளை நீக்கும் பணி தீவிரம்
/
வேளச்சேரி வடிகால்வாய் ஜல்லடைகளில் மண் அடைப்புகளை நீக்கும் பணி தீவிரம்
வேளச்சேரி வடிகால்வாய் ஜல்லடைகளில் மண் அடைப்புகளை நீக்கும் பணி தீவிரம்
வேளச்சேரி வடிகால்வாய் ஜல்லடைகளில் மண் அடைப்புகளை நீக்கும் பணி தீவிரம்
ADDED : ஜூன் 25, 2025 12:11 AM

வேளச்சேரி, வேளச்சேரியில், லேசான மழைக்கே சாலையில் வெள்ளம் தேங்குவதால், வடிகால்வாய் ஜல்லடைகள் மற்றும் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை, 'சூப்பர் செக்கர்' வாகனம் கொண்டு சுத்தம் செய்யும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
அடையாறு மண்டலம், 175, 176, 177 ஆகிய வார்டுகள், வேளச்சேரி பகுதிக்கு உட்பட்டவை. இங்கு, கனமழையின்போது பெரிய அளவில் வெள்ள பாதிப்பு ஏற்படும்.
அதேபோல், தாழ்வான பகுதியானதால், இதர பகுதியில் இருந்து அடித்து வரும் குப்பை, மண் போன்றவை, வடிகால்வாய் மற்றும் ஜல்லடைகளில் அடைப்பு ஏற்படுத்தும். இதனால், லேசான மழைக்கே சாலையில் வெள்ளம் தேங்கும்.
சாலையில் செல்லும் மழைநீர், வடிகால்வாயில் விழும் வகையில், முக்கால் அடி அகலம், ஆழம் கொண்ட ஜல்லடைகள், 10 மீட்டர் இடைவெளி வீதம் அமைக்கப்பட்டு உள்ளது.
ஒவ்வொரு பருவமழைக்கு பின்னும், ஜல்லடைக்குள் அடைந்துள்ள மண், குப்பையை அகற்றி சுத்தம் செய்யப்படும். ஆனால், தற்போது அடிக்கடி மழை பெய்வதால், அடைந்து கிடக்கும் ஜல்லடை வழியாக மழைநீர் செல்லாமல் சாலையில் தேங்குகிறது.
இதனால், அனைத்து ஜல்லடைகள் மற்றும் வடிகால்வாயில் இணைத்துள்ள மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை சுத்தம் செய்யும் பணியில் மாநகராட்சி ஈடுபட்டுள்ளது.
பொதுவாக, ஒப்பந்தம் விட்டு ஊழியர்களை கொண்டு சுத்தம் செய்யப்படும். ஒப்பந்த நிறுவனத்தினர், மண், குப்பையை அள்ளி வெளியே வைத்து, நாள்கணக்கில் அகற்றாமல் விட்டதால், லேசான மழைக்கே மீண்டும் ஜல்லடையில் மண் விழும் நிலை ஏற்பட்டது.
இதனால், 'சூப்பர் செக்கர்' வாகனம் பயன்படுத்தி, மண், குப்பையை அகற்றும் பணி நடக்கிறது. அகற்றப்படும் மண், பெருங்குடி குப்பை கிடங்கில் கொட்டப்படுகிறது.
மண்டலத்தில், சுழற்சி முறையில் வார்டு வாரியாக சுத்தம் செய்யும் பணி நடக்கிறது. இதனால், எதிர்பார்க்காத மழை பெய்யும்போது, சாலையில் வெள்ளம் தேங்குவது தடுக்கப்படும் என, மாநகராட்சி அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.