அடையாறு ஆற்றில் ஆகாய தாமரை அகற்றும் பணி துவக்கம்
அடையாறு ஆற்றில் ஆகாய தாமரை அகற்றும் பணி துவக்கம்
ADDED : பிப் 24, 2026 05:53 AM

அடையாறு: கொசு தொல்லை அதிகரித்ததால், அடையாறு ஆற்றில் ஆகாய தாமரை அகற்றும் பணி துவங்கியது.
அடையாறு மண்டலம் கிண்டி, சைதாப்பேட்டை, கோட்டூர்புரம், காந்தி நகர் வழியாக அடையாறு ஆறு கடலில் சேர்கிறது. இதில், மல்லிப்பூ நகர், காந்தி நகர், கோட்டூர்புரம் பகுதிகளில் 1.5 கி.மீ., துாரம் வரை ஆகாய தாமரை படர்ந்து காணப்பட்டது.
இதனால், ஆற்றில் இருந்து அரை கி.மீ., துாரம் வரை கொசுத்தொல்லை அதிகரித்தது. சிலர், காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து, ஆற்றில் உள்ள ஆகாய தாமரையை அகற்ற மாநகராட்சி முடிவு செய்தது.
அதன்படி, கோட்டூர்புரம், காந்தி நகர், மல்லிப்பூ நகர் உள்ளிட்ட பகுதிகளில் இரண்டு மிதவை இயந்திரங்கள் வாயிலாக ஆகாய தாமரை அகற்றும் பணி, நேற்று துவங்கியது.
சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'இந்த பணி முடிந்த பின், பகிங்ஹாம் கால்வாய், வேளச்சேரி ஏரியில் மிதவை இயந்திரம் வாயிலாக ஆகாய தாமரை அகற்றப்படும்' என்றனர்.
