ADDED : நவ 10, 2024 12:31 AM
எம்.கே.பி.நகர்: சென்னை கன்னிகாபுரம், கஸ்துாரிபாய் காலனியை சேர்ந்தவர் ரமேஷ், 36; இவருக்கு வலது கை இல்லை; சவுண்ட் சர்வீஸ் கடையில் வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் நள்ளிரவு, தன் நண்பர்கள் ஐந்து பேருடன், செங்குன்றம் பகுதியில் இருந்து, வள்ளலார் நகர் நோக்கி செல்லும் தடம் எண் -----57 மாநகர பேருந்தில், சர்மா நகரில் ஏறினார். வியாசர்பாடி மார்க்கெட்டில் இறங்க டிக்கெட் எடுத்துள்ளார்.
சர்மா நகரில் இருந்து சற்று துாரம் பேருந்து சென்ற நிலையில், திடீரென ரமேஷ் மயங்கி விழுந்தார். அவரை பேருந்தில் இருந்து நண்பர்கள் கீழே இறக்கி, காவல் கட்டுப்பாட்டு அறை மற்றும் 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தனர். ஆம்புலன்ஸ் ஊழியர்கள் விரைந்து வந்து பரிசோதித்தபோது, ரமேஷ் உயிரிழந்தது தெரியவந்தது.
இதுகுறித்து, எம்.கே.பி.நகர் போலீசார் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்கு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழப்புக்கான காரணம் குறித்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.