/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தொழிலாளி கொன்று புதைப்பு பாதிரிவேடில் பரபரப்பு
/
தொழிலாளி கொன்று புதைப்பு பாதிரிவேடில் பரபரப்பு
ADDED : ஜன 30, 2024 12:37 AM

கும்மிடிப்பூண்டி, திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அடுத்த பாதிரிவேடைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன், 43; இவரது நண்பர் நெசவு தொழிலாளியான டெல்லி பிரசாத், 40; செங்குன்றம் அடுத்த பாலவாயில் அரசு மதுக்கடையில் விற்பனையாளராக வேலை பார்த்து வருகிறார்.
டெல்லி பிரசாத்துக்கு முதுகு வலி இருப்பதால், டூ - -வீலரை ஓட்டுவதுடன் கடையில் தனக்கு உதவியாக இருக்க, பாலசுப்பிரமணியத்தை ஓராண்டு காலமாக அழைத்து சென்று வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் வழக்கம் போல், டெல்லி பிரசாத்துடன் காலையில் சென்ற பாலசுப்பிரமணியன், இரவு வீடு திரும்பவில்லை. இது குறித்து அவரது மகன் சதீஷ், 19, பாதிரிவேடு போலீசில் புகார் அளித்தார்.
விசாரணையில், பாலசுப்பிரமணியன் வீட்டின் தெருமுனையில், அவர் பயன்படுத்தும் தலைகவசம், சாப்பாட்டு பை, ரத்த கறையுடன் இருப்பது கண்டறியப்பட்டது. சற்று தொலைவில் உள்ள குளக்கரை அருகே உடலை புதைத்தது போல் மண் குவியல் காணப்பட்டது.
இதையடுத்து, கும்மிடிப்பூண்டி தாசில்தார் பிரீத்தி முன்னிலையில், அந்த இடத்தை போலீசார் தோண்டினர்.
அதில், பாலசுப்பிரமணியத்தின் உடல் கண்டெடுக்கப்பட்டது. தலையில் ரத்த காயங்களுடன் இருந்த உடலை, பொன்னேரி அரசு பொது மருத்துவமனை அனுப்பி வைத்தனர். அவர் அடித்து கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டது தெரியவந்துள்ளது.
இது குறித்து, டெல்லி பிரசாத்திடம் போலீசார் கேட்ட போது, நேற்று முன்தினம் இரவு, தெரு முனையில் அவரை இறக்கி விட்டு சென்றதாக தெரிவித்துஉள்ளார். மேற்கொண்டு, அவரிடம் விசாரித்து வருகின்றனர்.