உலக தரத்தில் நுாலகம், அறிவு மையங்கள் அமைக்கப்படும்: கார்த்திக் மோகன் வாக்குறுதி
உலக தரத்தில் நுாலகம், அறிவு மையங்கள் அமைக்கப்படும்: கார்த்திக் மோகன் வாக்குறுதி
ADDED : ஏப் 15, 2026 06:15 PM

சென்னை: வில்லிவாக்கம் மெட்ரோ ரயில் நிலையம் அருகில், உலக தரத்தில் நுாலகம், அறிவு மையங்கள் உட்பட ஐந்தாண்டு கால தொலைநோக்கு திட்டங்களை, தி.மு.க., வேட்பாளர் கார்த்திக் மோகன் அறிவித்தார்.
வில்லிவாக்கம் தொகுதியில், தி.மு.க., வேட்பாளராக கார்த்திக் மோகன் போட்டியிடுகிறார். நேற்று காலை, அண்ணா நகர் மேற்கு, அகத்தியர் நகர் விரிவு பகுதிகளில் பிரசாரத்தை மேற்கொண்டார்.
அப்போது, காந்தி பூங்காவில் நடைபயிற்சியில் ஈடுபட்டோரை நேரில் சந்தித்து ஆதரவு கேட்டார். தொகுதியில் செய்ய வேண்டிய தேவைகள், கோரிக்கைகளை கேட்டறிந்து, ஆட்சி அமைந்தபின், அவற்றுக்கு உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக, வாக்குறுதியும் அளித்தார்.
அண்ணா நகர் 'ஐ' பிளாக் கம்பர் காலனி மைதானத்திற்கு சென்று, விளையாடிக் கொண்டிருந்த வாலிபர்களிடம் கலந்துரையாடி, விளையாட்டுத் துறையில் தி.மு.க., செயல்படுத்தியுள்ள திட்டங்களை விளக்கி, ஆதரவு கோரினார்.
மாலையில், வில்லிவாக்கம் மேற்கு, தென்னங் காலனி, பாலமுருகன் கோவில் தெருக்கள், மகாதேவன் காந்தி பூங்கா உள்ளிட்ட இடங்களில் பிரசாரம் செய்து, ரயில்வே 'கேட்' அருகில் நிறைவு செய்தார்.
பிரசாரத்தின் போது, வில்லிவாக்கம் தொகுதிக்கான ஐந்து ஆண்டுகால தொலைநோக்கு வளர்ச்சி திட்டங்களை அறிவித்தார்.
இதுகுறித்து கார்த்திக் மோகன் கூறியதாவது:
வில்லிவாக்கத்தில் அமைய உள்ள மெட்ரோ ரயில் நிலையம் அருகில், உலக தரம் வாய்ந்த நுாலகம் மற்றம் அறிவு மையம் அமைக்கப்படும். இது, மாணவர்கள் மட்டுமின்றி குடியிருப்பு மக்களின் கற்றல், புதுமை மற்றும் சமூக ஈடுபாட்டிற்கான மையமாக செயல்படும்.
மேலும், பொதுமக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தும் வகையில், பாபா நகர் மற்றும் ஜெகநாதன் நகரில் நவீன் வசதிகள் மற்றும் பசுமை பூங்கா உருவாக்குவேன். பொழுதுபோக்கு வசதிகளுடன் சர்வதேச தரத்தில் பூங்காக்கள் அமைக்கப்படும்.
தொகுதியின் உள்கட்டமைப்பை வலுப்படுத்தும் வகையில், அயனாவரம் விளையாட்டு மையமாக மேம்படுத்தப்படும். இதற்காக அயனாவரத்தில் உலக தரம் வாய்ந்த விளையாட்டு வசதி மையம் உருவாக்கப்படும்.
வில்லிவாக்கம் தொகுதி முழுதும், ஒவ்வொரு வார்டிலும் இளைஞர்களுக்கான திறன் மேம்பாட்டு மையங்கள், வழிகாட்டுதல் மற்றும் டிஜிட்டல் எழுத்தறிவு பயிற்சி வழங்கும் தொழில் முனைவோர் மையங்கள் நிறுவப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
