/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
உலக மெய்நிகர் டென்னிஸ் சென்னை வீரர் சாம்பியன்
/
உலக மெய்நிகர் டென்னிஸ் சென்னை வீரர் சாம்பியன்
ADDED : செப் 22, 2025 10:54 PM

சென்னை;அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் நடந்த, முதல் உலக மெய்நிகர் டென்னிஸ் போட்டியில், சென்னை வீரர் சாம்பியன் பட்டம் வென்றார்.
மெய்நிகர் எனும் 'விர்ச்சுவல்' தொழில்நுட்ப வீடியோ அடிப்படையில் வீரர்கள் விளையாடும் வகையில், உலக இ - ஸ்போர்ட்ஸ் சம்மேளனம் சார்பில், டென்னிஸ் போட்டிகள் நடத்தப்படுகின்றன.
இதில், சென்னையைச் சேர்ந்த டென்னிஸ் வீரர் விமல்ராஜ், கொல்கட்டாவில் நடந்த 'நோ ஸ்கோப் கேமிங்' போட்டியில் வெற்றி பெற்று, தேசிய வீரராக தேர்வானார்.
பின், அமெரிக்காவின் வலிமையான வீரர்களை நாக் - அவுட் சுற்றுகளில் வீழ்த்திய அவர், காலிறுதி, அரையிறுதி போட்டிகளில், ஆஸ்திரியா, ஜெர்மனி வீரர்களை வீழ்த்தி, இறுதிச் சுற்றுக்கு முன்னேறினார்.
கடந்த 10ம் தேதி, அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் நடந்த இறுதிப் போட்டியில், மூன்று கடுமையான சுற்றுகளில், ஆஸ்திரிய வீரர் ஆர்த்தர் பிராவோஸ்ட்டுடன் மோதி, வெற்றியடைந்தார். அதனால், உலகின் முதல் இ - டென்னிஸ் சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்தார்.
இதுகுறித்து, விமல்ராஜ் கூறியதாவது:
இ - டென்னிஸ் என்பது, வீடியோ கேம் போன்றது அல்ல. நம்முடன் இன்னொரு வீரர் விளையாடுவார்.
ஆனால், இருவரும் மைதானத்தில் நின்று விளையாடுவதற்கு பதில், ஆளுக்கொரு இடத்தில் நின்று விளையாடுவோம்.
நம் நடவடிக்கைகள் அனைத்தும், நிஜ மைதானத்தில் உள்ளது போலவே தான் இருக்கும்.
இந்த விளையாட்டின் போது, நான் ஐந்து கிலோ எடை குறைந்துள்ளேன். அந்த அளவுக்கு கடுமையாக இருந்தது.
தற்போது, சாம்பியன் ஆனதற்காக, 10,000 அமெரிக்க டாலர்கள் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டுள்ளது.
இந்த புதிய சாதனையை படைத்தது, மகிழ்ச்சியாக உள்ளது. இதன் வாயிலாக, இந்தியாவில், இந்த விளையாட்டு குறித்து விழிப்புணர்வு ஏற்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.