/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சில வரி : வியாபாரியிடம் கைவரிசை இளம்பெண் கைது
/
சில வரி : வியாபாரியிடம் கைவரிசை இளம்பெண் கைது
ADDED : ஆக 22, 2025 12:35 AM

-
திருவல்லிக்கேணி: திருவல்லிக்கேணி, தைபூன் அலிகான் தெருவைச் சேர்ந்த வசந்தி, 48, சி.என்.கே.,சாலையில் 22 ஆண்டுகளாக பெட்டிக்கடை நடத்தி வருகிறார்.
கடந்த, 31ம் தேதி, இவரது கடைக்கு வந்த திருவல்லிக்கேணியைச் சேர்ந்த சவுமியா, 23, என்பவர், அவசரமாக பேசிவிட்டு தருவதாக, வசந்தியின் மொபைல் போனை வாங்கி, திருடிச்சென்றார்.
போலீசார் நேற்று, சவுமியாவை கைது செய்த, அந்த மொபைல் போனை பறிமுதல் செய்தனர். இவர், இதேபோல் பிரியாணி கடையில் ஒருவரிடமும் மொபைல் பறித்துள்ளார்.
--
மாடியில் இருந்து
விழுந்து ஒருவர் பலி
சேலையூர்: செம்பாக்கத்தைச் சேர்ந்தவர் இளங்கோவன், 75. ஓய்வு பெற்ற ஆசிரியர். நேற்று முன்தினம் காலை, வீட்டின் மாடியில் நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்த இளங்கோவன், நிலை தடுமாறி கீழே விழுந்தார். அவரது பராமரிப்பாளர் பாண்டியராஜன் என்பவர், அக்கம் பக்கத்தினர் உதவியுடன், குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில், அவரை சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி, இளங்கோவன் இறந்தார். இதுகுறித்து சேலையூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
--
புரோகிதரை மிரட்டி
தங்க நகை பறிப்பு
எம்.ஜி.ஆர்., நகர்: எம்.ஜி.ஆர்., நகர், சீத்தலை சாத்தனார் குறுக்கு தெருவில், வீட்டில் தனியாக வசிப்பவர் அனில்குமார், 61; புரோகிதர். இவருக்கு பழக்கமான 'பைக் டாக்ஸி' ஓட்டுநரான டேவிட் இளவரசன், 23, தன் நண்பர்களுடன் அனில்குமார் வீட்டிற்கு நேற்று முன்தினம் சென்றுள்ளார்.
அனில்குமாரிடம் கத்தியை காட்டி மிரட்டி, அவர் அணிந்திருந்த 10 கிராம் தங்க செயின் மற்றும் 3.75 கிராம் மோதிரங்களை பறித்துச் சென்றனர்.
விசாரித்த போலீசார், அயனாவரம் திருவள்ளுவர் நகரைச் சேர்ந்த டேவிட் இளவரசன் என்பவரை கைது செய்தனர்; நகைகளையும் மீட்டனர்.
--
அரசு பள்ளியில்
வெடிகுண்டு மிரட்டல்
செம்மஞ்சேரி: செம்மஞ்சேரி அரசு மேல்நிலை பள்ளியில், 960க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் படிக்கின்றனர். நேற்று மதியம், பள்ளியில் வெடிகுண்டு வைத்திருப்பதாக தகவல் பரவியது.
இதையடுத்து போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள், பள்ளி முழுதும் சோதனை செய்தனர். இரண்டு மணி நேரம் நடத்திய சோதனைக்கு பின், வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரிந்தது.
--
தொழிலாளி பலி
லாரி ஓட்டுநர் கைது
அண்ணா நகர்: மணலியைச் சேர்ந்த பாண்டியன், 48, கூடலிங்கம், 59, ஆகியோர், இம்மாதம் 19ம் தேதி இரவு, 'ஹோண்டா ஆக்டிவா' ஸ்கூட்டரில் அசோக் பில்லரை நோக்கி சென்றனர்.
திருமங்கலம் மேம்பாலத்தில் செல்லும்போது, அவ்வழியாக வந்த டிப்பர் லாரி, முந்தி செல்ல முயன்று பாண்டியனின் ஸ்கூட்டரில் மோதியது. இதில், லாரியின் சக்கரத்தில் சிக்கி, கூடலிங்கம் சம்பவ இடத்திலே பலியானார்; பாண்டியன் பலத்த காயமடைந்தார். அண்ணா நகர் போலீார் விசாரித்து, லாரி ஓட்டி விபத்து ஏற்படுத்திய செங்குன்றம், அலமாதியைச் சேர்ந்த கோவிந்தராஜன், 46, என்பவரை நேற்று கைது செய்தனர்.
--
காப்பர் ஒயர்
திருடிய நபர் கைது
மாங்காடு: மாங்காடு அருகே, மதனந்தபுரத்தில் புதிதாக கட்டப்படும் கட்டடத்தில் வைக்கப்பட்டிருந்த, மின் தேவைக்கான காப்பர் ஒயர்கள் திருடுபோகின.
கண்காணிப்பு கேமரா காட்சிகளை சோதனை செய்த மாங்காடு போலீசார், அதே பகுதியைச் சேர்ந்த கூலி தொழிலாளியாக பணிபுரியும் மதுராந்தகத்தைச் சேர்ந்த தமிழரசன் என்ற டேனியலை, 36, நேற்று கைது செய்து, மின் காப்பர் ஒயர்களை பறிமுதல் செய்தனர்.
--
மொபைல் பறித்த
சிறுவன் கைது
அயனாவரம்: அயனாவரம் புதுநகரைச் சேர்ந்த ரச்சிதா, 18; திருநங்கை. கடந்த மாதம் 21ம் தேதி, அதே பகுதியில் நடந்து சென்றபோது, ரச்சிதாவை வழிமறிந்த சிறுவர்கள், அவரது மொபைல் போனை பறித்தனர். சிறுவர்களை கண்டுபிடித்து மொபைல் போனை கேட்ட ரச்சிதாவின் நண்பர் முருகனை, பீர்பாட்டிலால் தாக்கினர்.
இந்த வழக்கில், 14 வயது சிறுவனை போலீசார் ஏற்கனவே கைது செய்து, சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர். தலைமறைவாக இருந்த 17 வயது சிறுவனை, போலீசார் நேற்று கைது செய்தனர்.
--
மீனவருக்கு மிரட்டல்
விடுத்தவர் கைது
பட்டினம்பாக்கம்: பட்டினப்பாக்கம், முள்ளிமா நகரில் வசிப்பவர் பிரபு, 38; மீனவர் மற்றும் கார் ஓட்டுநர். நேற்று முன்தினம் மதியம், 'மீனவன் மெஸ்' உணவகம் எதிரே மணற்பரப்பில் துாங்கி கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த சுரேஷ்குமார், மீன் வலைகளை திருட வந்தாயா என பிரபுவிடம் கேட்டதால், இருவருக்கும் வாய் தகராறு ஏற்பட்டது.
இதில் ஆத்திரமடைந்த சுரேஷ்குமார், அங்கு கிடந்த உருட்டு கட்டையால் பிரபுவை தாக்கி, கொலை மிரட்டலும் விடுத்தார். பிரபு புகாரின்படி, பட்டினப்பாக்கம் போலீசார், சுரேஷ்குமாரை நேற்று கைது செய்தனர்.
--
வாலிபரை வெட்டிய
கும்பலுக்கு வலை
வானகரம்: வானகரம், சுங்கச்சாவடி அணுகு சாலையில் உள்ள, தனியார் போக்குவரத்து நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிபவர் அஜித், 30.
நேற்று முன்தினம் பணி முடிந்து, மதுரவாயல் ஜானகி நகரில் உள்ள தன் வீட்டிற்கு நடந்து சென்றார். அப்போது, இரண்டு இருசக்கர வாகனத்தில் வந்த நான்கு பேர் கும்பல், அஜித்தை கத்தியால் வெட்டி, தப்பிச் சென்றது. அவ்வழியே சென்றோர் அஜித்தை மீட்டு, அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். வானகரம் போலீசார் விசாரிக்கின்றனர்.
--
நண்பனின் முகத்தில்
வெட்டியவர் கைது
கண்ணகி நகர்: கண்ணகி நகர், சுனாமி குடியிருப்பைச் சேர்ந்தோர் சுரேஷ், 39, வசந்த், 38. நண்பர்களான இருவரும், நேற்று அதே பகுதியில் மது அருந்தி கொண்டிருந்தனர். போதையில், இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதில், ஆத்திரமடைந்த வசந்த், மறைத்து வைத்திருந்த கத்தியால் சுரேஷ் முகத்தில் சரமாரியாக வெட்டினார். ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சுரேஷுக்கு, 10 தையல் போடப்பட்டது. கண்ணகி நகர் போலீசார், வசந்தை கைது செய்தனர்
--
எலக்ட்ரீஷியனிடம்
பணம் பறிப்பு?
தரமணி: ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர் பிலித்தேஷ் கருமாளி, 26. தரமணியில் தங்கி, அங்குள்ள ஒரு ஐ.டி., நிறுவனத்தில் எலக்ட்ரீஷியனாக பணிபுரிகிறார்.
இவர், நேற்று முன்தினம் இரவு, தரமணி 100 அடி சாலையில் நடந்து சென்றபோது இருவர் வழிமறித்து, 'கூகுள் பே' செயலி மூலம், 45,000 ரூபாய் பறித்ததாக, தரமணி போலீசில் கூறினார். போலீசார், அவர் கூறிய பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தபோது அப்படி ஒரு சம்பவம் நடக்கவில்லை என தெரியவந்தது. எனினும், போலீசார் விசாரித்து வருகின்றனர்.