ADDED : டிச 21, 2024 12:23 AM
ராயபுரம்: ராயபுரம், ராமன் தெருவைச் சேர்ந்தவர் ரூபியா பாத்திமா, 25. இவருக்கும், மதுரையைச் சேர்ந்த தமீம் அன்சாரி, 26, என்பவருக்கும் திருமணமாகி, 1 வயதில் மகன் உள்ளார்.
மதுரையில் கணவர் வீட்டில் வசித்து வந்தபோது, அவரது கணவர் மற்றும் குடும்பத்தார் வரதட்சணை கொடுமைப்படுத்தியதால்,ராயபுரத்தில் உள்ள பெற்றோர் வீட்டில் ரூபியா பாத்திமா வசித்து வருகிறார்.
இந்த நிலையில், கடந்த மாதம் 17ம் தேதி இரவு ராயபுரத்தில் உள்ள ரூபியா பாத்திமா வீட்டிற்கு வந்த தமீம் அன்சாரி, பணம் மற்றும் நகைகள் கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார். மேலும், ரூபியாவின் சகோதரர் மற்றும் தந்தையை தாக்கினார். ரூபியாவையும் சரமாரியாக தாக்கியதில், அவர் மயக்கமடைந்தார்.
அக்கம்பக்கத்தினர் ரூபியாவை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இது குறித்து விசாரித்த ராயபுரம் அனைத்து மகளிர் போலீசார், தலைமறைவாக இருந்த தமீம் அன்சாரியை, நேற்று கைது செய்தனர்.
