நுாதன முறையில் விலை உயர்ந்த மொபைல்போனை திருடிய வாலிபர் கைது
நுாதன முறையில் விலை உயர்ந்த மொபைல்போனை திருடிய வாலிபர் கைது
ADDED : ஜூலை 15, 2026 09:03 PM
சென்னை:ரயில் பயணியரிடம் நுாதன முறையில் விலை உயர்த்த மொபைல்போனை திருடிய வாலிபரை ரயில்வே போலீசார் கைது செய்தனர்.
சென்னை அடுத்த எண்ணுார் நேரு நகரை சேர்ந்தவர் அபிமன்யு 26. இவர் வியாசர்பாடியில் உள்ள போக்குவரத்து பணிமனையில் ஊழியராக பணியாற்றுகிறார். இவர் கடந்த 13ம் தேதி இரவு மின்சார ரயிலில் படிக்கட்டு ஓரம் நின்றபடி சென்று கொண்டிருந்தார். இந்த ரயில் கொருக்குப்பேட்டை - பேசின்பிரிட்ஜ் இடையே மெதுவாக சென்றபோது, அபிமன்யுவின் மொபைல்போனை ஒரு நபர் குச்சியால் தட்டி கீழே விழவைத்து, எடுத்து கொண்டு தப்பி ஓடினார். இது குறித்து, கொருக்குபேட்டை ரயில்வே போலீசில் அபிமன்யு புகார் கொடுத்தார். இதன்பேரில், ரயில்வே போலீஸார் வழக்குப்பதிந்து, குற்றவாளியை அடையாளம் கண்டு தேடிவந்தனர்.
இந்நிலையில், கொருக்குபேட்டை மீனம்பாள் பாலம் அருகே நின்று கொண்டிருந்த குற்றவாளியை போலீஸார் கைது செய்தனர். விசாரணையில், பழைய வண்ணாரப்பேட்டை பெஜவாடா நகரைச் சேர்ந்த அஜித் 24, எனவும், மொபைல்போனை குச்சியால் தட்டி பறித்து தப்பியதும் தெரியவந்தது. இதையடுத்து, அவரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
