UPDATED : ஆக 31, 2026 08:21 PM
ADDED : ஆக 31, 2026 08:20 PM
ஜெ.ஜெ.நகர்: மொபைல் போன் திருடிய, ஆகாஷ், 25, என்ற பழைய குற்றவாளியை, பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து, போலீசில் ஒப்படைத்தனர்.
அம்பத்துார், மாதனாங்குப்பம், ஆண்டாள் கோவில் பிரதான சாலையைச் சேர்ந்தவர் அமிர்தலிங்கம், 52; தனியார் கட்டுமான நிறுவன ஊழியர்.
அம்பத்துார் தொழிற்பேட்டை சாலை, முட்டைக்கடை சந்திப்பில் ஒரு கடையில், நேற்று முன்தினம் டீ குடித்து கொண்டிருந்தார். அப்போது, இருசக்கர வாகனத்தில் இருந்த அவரது மொபைல் போனை மர்ம நபர் திருடி, தப்பி செல்ல முயன்றார்.
இதை பார்த்த அமிர்தலிங்கம், அங்கிருந்தோர் உதவியுடன் வாலிபரை பிடித்தார். அனைவரும் தர்ம அடி கொடுத்து, ஜெ.ஜெ.நகர் போலீசில் அவரை ஒப்படைத்தனர்.
போலீசார் விசாரணையில், அண்ணா நகர் மேற்கு விரிவாக்கம் பகுதியைச் சேர்ந்த ஆகாஷ், 25, என்பது தெரிந்தது. அவரை கைது செய்து, நேற்று முன்தினம் சிறையில் அடைத்தனர். இவர் மீது, திருட்டு, வழிப்பறி உட்பட, 12 வழக்குகள் நிலுவையில் உள்ளன.
