ADDED : ஆக 14, 2026 10:23 PM
சென்னை: வீடு வாடகை பாக்கி கேட்ட உரிமையாளரை தாக்கிய வாலிபரை, போலீசார் கைது செய்தனர்.
புது வண்ணாரப்பேட்டை, ஆவூர் முத்தையா தெருவைச் சேர்ந்தவர் ஆனந்தி, 55, இவருக்கு சொந்தமான வீடு, வீரராகவன் தெருவில் உள்ளது.
இந்த வீட்டில், சீனிவாசன், 32, என்பவர் தன் தாயுடன் வாடகைக்கு குடியிருந்து வந்துள்ளார். மாதம், 6,000 ரூபாய் வாடகை செலுத்த வேண்டிய நிலையில், ஒன்பது மாதங்களாக வாடகை செலுத்தாமல் சீனிவாசன் ஏமாற்றி வந்துள்ளார்.
இது குறித்து, நேற்று முன்தினம், வீட்டின் உரிமையாளர் ஆனந்தி, வாடகைதாரர் சீனிவாசனிடம் கேட்கச் சென்றபோது, தகராறு ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த சீனிவாசன், வீடு துடைக்கும் மாப்பை எடுத்து, ஆனந்தியை தாக்கியுள்ளார். இதில், அவருக்கு கையில் காயம் ஏற்பட்டு, சிகிச்சைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
சம்பவம் குறித்து, வழக்கு பதிவு செய்த புது வண்ணாரப்பேட்டை போலீசார், தாக்குதலில் தொடர்புடைய, சீனிவாசன், 32, என்பவரை, நேற்று கைது செய்தனர்.
