/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கள்ளக்காதல் விவகாரத்தில் இளைஞர் அடித்து கொலை
/
கள்ளக்காதல் விவகாரத்தில் இளைஞர் அடித்து கொலை
ADDED : அக் 25, 2024 12:41 AM

திருநின்றவூர், திருநின்றவூர் அடுத்த நடுக்குத்தகை, கங்கை அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ரியாஸ், 21; வெல்டர். இவர் மீது கொலை முயற்சி, கஞ்சா உட்பட நான்கு வழக்குகள் உள்ளன.
நேற்று மதியம் ரியாஸ், வீட்டின் பின்புறம் மர்மமான முறையில் இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
திருநின்றவூர் போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.
இந்த நிலையில், கொலை தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த ராபர்ட், 31, மற்றும் ஜேம்ஸ், 38, ஆகியோர், நேற்று மதியம் திருநின்றவூர் போலீசில் சரண் அடைந்தனர்.
போலீசாரிடம் ராபர்ட் அளித்த வாக்குமூலம்:
நானும், என் மனைவி அனுசியாவும் கருத்து வேறுபாடால் பிரிந்து வாழ்ந்து வருகிறோம். இந்நிலையில், என் மனைவிக்கும், ரியாஸின் நண்பரான ஷியாம் என்பவருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. நேற்று அதிகாலை, நானும் என் தாய்மாமன் ஜேம்ஸும், நடுக்குத்தகை, பால்வாடி தெருவில் மது அருந்திக் கொண்டிருந்தோம்.
அப்போது மது போதையில் வந்த ரியாஸ், அவரது தம்பி பயாஸ் மற்றும் ஷியாம் மூவரும், என் மனைவியின் கள்ளத்தொடர்பு குறித்து பேசி, வீண் தகராறில் ஈடுபட்டு இருவரையும் கட்டையால் தாக்கினர்.
ஆத்திரமடைந்த நாங்கள், அவர்களை துரத்திச் சென்றபோது, பயாஸ் மற்றும் ஷியாம் இருவரும் தப்பிச் சென்றனர்.
வீட்டின் பின்புறம் தப்பியோடிய ரியாஸ், தடுமாறி விழுந்த போது இருவரும் சேர்ந்து கல் மற்றும் கட்டையால் தலையில் சரமாரியாக தாக்கியதில், ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலே உயிரிழந்தார்.
இவ்வாறு வாக்குமூலத்தில் தெரிவித்திருந்தார்.
இதையடுத்து, போலீசார், இருவரையும் கைது செய்து நேற்று சிறையில் அடைத்தனர். இதில், ராபர்ட் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன.