ADDED : மார் 01, 2026 05:35 AM
கொத்தவால்சாவடி: கழிப்பறைக்கு கூரை அமைத்தபோது, மின்மாற்றியில் இரும்பு ஷீட் உரசியதில், கூலித் தொழிலாளி மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார்.
கொத்தவால்சாவடி, அண்ணாபிள்ளை தெருவைச் சேர்ந்தவர் முத்துகுமார், 57. இவர், அதே பகுதியில் புதிதாக வீடு கட்டி வருகிறார். இதற்கான பணிகளை, மேற்கு வங்கத்தைச் சேர்ந்த மோமின், 30, சூரஜ், 23, ரியாஸ்கான், 22, உள்ளிட்டோர் செய்து வந்தனர்.
நேற்று, முதல் தளத்தில் கழிப்பறை அமைக்கும் பணியில் ஈடுபட்டனர். அதற்கு கூரை அமைப்பதற்காக, இரும்பு சீட்டை எடுத்து வந்தனர்.
அப்போது அருகில் இருந்த மின்மாற்றியில் இரும்பு ஷீட் உரசியதால், அவர்கள் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் மோமின் உட்பட மூவரும் பலத்த காயமடைந்தனர்.
அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டபோது, வரும்வழியில் மோமின் இறந்துவிட்டதாக, டாக்டர்கள் தெரிவித்தனர். மேலும், ரியாஸ்கான், சூரஜ் ஆகியோருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து கொத்தால்சாவடி போலீசார் விசாரிக்கின்றனர்.
