/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மண்டல தடகளம்: சென்னை போலீசார் 'சாம்பியன்'
/
மண்டல தடகளம்: சென்னை போலீசார் 'சாம்பியன்'
ADDED : பிப் 17, 2024 12:41 AM

கோவை, தமிழ்நாடு போலீசார் சார்பில், அனைத்து மண்டலங்களுக்கு இடையேயான 63வது தடகளப் போட்டி, கோவை நேரு ஸ்டேடியத்தில், கடந்த 14ம் தேதி துவங்கி நேற்று வரை நடந்தது.
இதில் ஒன்பது அணிகளைச் சேர்ந்த 687 வீரர் - வீராங்கனையர் பங்கேற்றனர். மொத்தம் 16 புதிய சாதனைகள் படைக்கப்பட்டன. அதில் 12 சாதனைகள் பெண்கள் பிரிவில் வந்துள்ளன.
ஆண்கள் பிரிவில், ஆயுதப்படை போலீஸ் அணி 187 புள்ளிகள் எடுத்து முதலிடமும், 106 புள்ளிகள் எடுத்து, சென்னை பெருநகர போலீஸ் அணி இரண்டாம் இடமும் பிடித்தன.
பெண்கள் பிரிவில், சென்னை பெருநகர போலீஸ் அணி 185 புள்ளிகள் எடுத்து முதலிடம் மற்றும் மேற்கு மண்டல அணி 148 புள்ளிகள் எடுத்து, இரண்டாமிடமும் பிடித்தன.
ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டியலில், சென்னை பெருநகர போலீஸ் அணி, 291 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து, கோப்பையை தட்டிச்சென்றது.
இரண்டாமிடத்தை, 236 புள்ளிகள் எடுத்த மேற்கு மண்டல அணி கைப்பற்றியது. வெற்றி பெற்றவர்களுக்கு, தமிழக டி.ஜி.பி., சங்கர் ஜிவால் பரிசு வழங்கினார்.
அப்போது அவர் பேசுகையில், ''நல்ல பயிற்சி பெற்றால், தேசிய சர்வதேச போட்டிகளில் நமது போலீசாரால், பெரிய அளவில் சாதிக்க முடியும் என நம்புகிறேன். விளையாட்டில் ஆர்வம் மற்றும் திறமையுள்ள போலீசாருக்கு, சிறப்பு பயிற்சி அளிக்க பயிற்சியாளர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.
பரிசளிப்பு விழாவில், ஆயுதப்படை கூடுதல் டி.ஜி.பி., ஜெயராம், ஆயுதப்படை ஐ.ஜி., லட்சுமி, கோவை அரசு மருத்துவமனை டீன் நிர்மலா, மாவட்ட விளையாட்டு அலுவலர் அருணா, சர்வதேச பயிற்சியாளர் நிஜாமுதீன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.