/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
2026 தேர்தலுக்கு தயாராகும் தி.மு.க., இளைஞர்களுக்கு வலை வீசுகிறது!பா.ஜ., எழுச்சியால் இப்போதே உஷார்!
/
2026 தேர்தலுக்கு தயாராகும் தி.மு.க., இளைஞர்களுக்கு வலை வீசுகிறது!பா.ஜ., எழுச்சியால் இப்போதே உஷார்!
2026 தேர்தலுக்கு தயாராகும் தி.மு.க., இளைஞர்களுக்கு வலை வீசுகிறது!பா.ஜ., எழுச்சியால் இப்போதே உஷார்!
2026 தேர்தலுக்கு தயாராகும் தி.மு.க., இளைஞர்களுக்கு வலை வீசுகிறது!பா.ஜ., எழுச்சியால் இப்போதே உஷார்!
ADDED : ஜூன் 26, 2024 02:25 AM

கோவை:வரும், 2026 சட்டசபை தேர்தலுக்கு திட்டமிட்டு, இப்போதே களத்தை தயார் செய்ய வேண்டுமென்கிற நோக்கத்துடன், கோவை தி.மு.க.,வினர், 'இல்லந்தோறும் இளைஞரணி' என்ற முழக்கத்துடன், வீடு வீடாகச் சென்று, உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்தியுள்ளனர். பா.ஜ.,வின் எதிர்பாராத எழுச்சியும், மக்களிடம் அண்ணாமலைக்கு கிடைத்து வரும் வரவேற்பும்தான், இதற்கு காரணம் என காதை கடிக்கின்றனர் உடன்பிறப்புகள்.
கோவை லோக்சபா தொகுதியை, 28 ஆண்டுகளுக்கு பின், தி.மு.க., கைப்பற்றி இருக்கிறது. இருப்பினும், 2019 தேர்தலோடு ஒப்பிடுகையில், ஓட்டு சதவீதம் குறைவு.
2019 தேர்தலில், இதே கூட்டணியோடு மா.கம்யூ., போட்டியிட்டதில், 45.85 சதவீத ஓட்டுகள் கிடைத்தது. இப்போது, 41.74 சதவீத ஓட்டுகளே கிடைத்திருக்கின்றன. இது, 4.11 சதவீதம் குறைவு.
இத்தேர்தலில், பா.ஜ., 33.07 சதவீதம், அ.தி.மு.க., 17.37 சதவீத ஓட்டுகள் பெற்றிருக்கின்றன. இவ்விரு கட்சிகளும் பெற்ற ஓட்டுகளை சேர்த்தால், 50.44 சதவீதமாகிறது. பா.ஜ.,- அ.தி.மு.க., பெற்ற ஓட்டுகளுடன் ஒப்பிட்டால், தி.மு.க.,வுக்கு 8.7 சதவீத ஓட்டுகள் குறைவு. அதனால், 2026 சட்டசபை தேர்தலுக்கு முன், கட்சியை இன்னும் வலுப்படுத்த வேண்டும் என, தி.மு.க.,வினருக்கு, அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
தற்போதுள்ள சூழலில் தேர்தலில் வெற்றி, தோல்வி இளைஞர்களின் கைகளில் இருக்கிறது. அதிலும், புதிய வாக்காளர்கள் வசம் உள்ளது. பள்ளிப்படிப்பை முடித்து கல்லுாரிகளுக்குள் நுழையும் மாணவ, மாணவியர், 18 வயதாகும்போது, வாக்காளர் பட்டியலில் இடம் பெறுவர்.
இதை கணக்கிட்டே, அரசு பள்ளிகளில் படித்து கல்லுாரிகளில் சேரும் மாணவியருக்கு, மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. வரும் ஆக., முதல் மாணவர்களுக்கு விரிவுபடுத்தப்படுகிறது.
அண்ணாமலையால் ஈர்ப்பு
இருப்பினும், பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலையின் பேச்சால் இளைஞர்கள் கவரப்படுகின்றனர். அவரது போராடும் குணத்துக்கு வரவேற்பு இருக்கிறது. அதனால், இளைஞர்கள், இளம்பெண்கள் மற்றும் நடுநிலையாளர்கள் ஓட்டு, அண்ணாமலை பக்கம் சாய்கிறது.
நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில், வீட்டுக்கு ஒரு ஓட்டு அண்ணாமலைக்கு பதிவானதாக, தகவல் வெளியானது. அதாவது, ஒரு வீட்டில் தாய், தந்தையர் எந்த கட்சியாக இருந்தாலும், மகனோ, மகளோ இம்முறை அண்ணாமலைக்கு ஓட்டளித்திருந்தனர்.
அதனால்தான், ஓட்டு வங்கி குறைவாக இருந்தபோதிலும், இளைஞர்கள் அளித்த ஆதரவால், பா.ஜ.,வால் அதிக ஓட்டு பெற முடிந்தது.
ஜெ., ஸ்டைலில் ஸ்டாலின்
இதற்கு முன், இளைஞர்களின் ஓட்டுகளை கவர, முன்னாள் முதல்வர் ஜெ., இளைஞர், இளம்பெண்கள் பாசறை உருவாக்கினார். இளம்தலைமுறையினரை கட்சிக்குள் கொண்டு வந்து, புது ரத்தம் பாய்ச்சினார்.
தற்போது அதே ஸ்டைலில், 'இல்லந்தோறும் இளைஞரணி' என்ற பெயரில், வீடு வீடாகச் சென்று, வீட்டுக்கு ஒரு இளைஞரை தி.மு.க.,வில் உறுப்பினராக சேர்க்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி, கோவை மாநகர் மாவட்ட செயலாளர் கார்த்திக், இளைஞரணி மாவட்ட அமைப்பாளர் தனபால் ஆகியோரது தலைமையில், உறுப்பினர் சேர்க்கைக்கான பணிகள் நடந்து வருகின்றன.
அந்தந்த பகுதி கழக செயலாளர்கள் தலைமையில் கிளை கழக செயலாளர்கள், பூத் ஏஜன்ட்டுகள் முன்னிலையில், பூத் இளைஞரணி பொறுப்பாளர்களுடன், மாநகர் மாவட்ட துணை அமைப்பாளர்கள், அவரவர்களுக்கு ஒதுக்கியுள்ள இடங்களில், உறுப்பினர் சேர்க்கையை அதிகரிக்க வேண்டுமென அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
இளைஞரணி மாநகர் மாவட்ட துணை அமைப்பாளர்கள், அந்தந்த இடங்களில் உள்ள இளைஞரணியினரை ஒருங்கிணைத்து, முழு அர்ப்பணிப்புடன் பணியாற்ற வேண்டும்; முடிந்தவரை அனைத்து பகுதிகளுக்கும், நேரில் செல்ல வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
ஆக, 2026 சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள, ஆளுங்கட்சியான தி.மு.க., இப்போதே திட்டமிட்டு, களப்பணியாற்றத் துவங்கி விட்டது.