பிளஸ் -1 மாணவர் தற்கொலை தலைமையாசிரியர் ‘சஸ்பெண்ட்’
பிளஸ் -1 மாணவர் தற்கொலை தலைமையாசிரியர் ‘சஸ்பெண்ட்’
UPDATED : அக் 24, 2026 12:00 AM
ADDED : அக் 23, 2026 06:56 PM

கோவை: கோவையில், பிளஸ் 1 மாணவர் தற்கொலை வழக்கில், சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய, கலெக்டர் அலுவலகம் முன் முற்றுகை போராட்டம் நடந்தது.
கோவை, பீளமேடு, சிருங்கர் நகர் அசோக்குமார் மகன் அகிலன், 16, அரசு உதவி பெறும் பள்ளியில் பிளஸ் 1 படித்தார். பள்ளி ஆசிரியர் மற்றும் இரண்டு மாணவர்கள் ஜாதி பாகுபாடு காட்டி, அவரது உணவு பழக்கம் குறித்து கேலி செய்ததால், அக்., 21ல் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சம்பவம் தொடர்பாக, பீளமேடு போலீசார், பள்ளி தலைமை ஆசிரியர் அருண்குமார், 50, வகுப்பாசிரியர் விஜயகுமார், 42, மற்றும் இரண்டு மாணவர்கள் மீது, தற்கொலைக்கு துாண்டுதல், எஸ்.சி., – எஸ்.டி., வன்கொடுமை தடுப்பு சட்டம், காயம் ஏற்படுத்துதல் ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில், விஜயகுமார் கைது செய்யப்பட்டார். தலைமை ஆசிரியர் உள்ளிட்ட அனைவரையும் கைது செய்யக்கோரி, கோவை கலெக்டர் அலுவலகம் முன் நேற்று முற்றுகை போராட்டம் நடத்தப்பட்டது.
மாவட்ட கல்வி துறை சார்பில், பள்ளிக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்நிலையில், தலைமை ஆசிரியர் அருண்குமார், ஆசிரியர் விஜயகுமார் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
