/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
12 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசா வாலிபர்கள் கைது
/
12 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசா வாலிபர்கள் கைது
ADDED : ஆக 01, 2024 01:17 AM
கோவை : கோவை மாநகரின் இருவேறு இடங்களிலும் சேர்த்து மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார், 12 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து, நால்வரை கைது செய்துள்ளனர்.
மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் ரோந்து மற்றும் வாகன சோதனைகளின் போது கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை பறிமுதல் செய்து, நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
நேற்று முன்தினம், துடியலுார் அடுத்த என்.ஜி.ஜி.ஓ., காலனி ரயில்வே கேட் அருகே ரோந்து சென்றபோது, சந்தேகத்துக்கு இடமான வகையில் இரு சக்கர வாகனத்தில் நின்று கொண்டிருந்தவர்களை பிடித்து விசாரித்தனர்.
அப்போது, திருப்பூர் மாவட்டம், பெருமாநல்லுாரை சேர்ந்த ரமேஷ்,45, மற்றும் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த ஜடபே பேஷ்ரா,33, ஆகியோரிடம் இருந்து, 8 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இருவரையும் கைது செய்த போலீசார், இரு சக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.
அதேபோல், வாலாங்குளம் அருகே சுங்கம் பைபாஸ் ரோட்டில் ரோந்து சென்றபோது சந்தேகத்துக்கு இடமாக நின்றுகொண்டிருந்தவர்களை பிடித்து சோதனையிட்டனர். அவர்களிடம், 4 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
விசாரணையில் அவர்கள், ஒடிசா மாநிலத்தை சேர்ந்த பீஷ்மா தண்டி,29, ஜடபா பேஷ்ரா,23, என்பது தெரியவந்தது.
இருவேறு இடங்களில் இருந்தும் பறிமுதல் செய்யப்பட்ட, 12 கிலோ கஞ்சா, ஒடிசா மாநிலத்தில் இருந்து தருவிக்கப்பட்டு, இங்கு விற்பனை செய்யவிருந்தது தெரியவந்துள்ளது. கைதானவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடக்கிறது.