/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அத்திக்கடவு திட்டத்தில் 25 சதவீத குட்டைகளுக்கு நீர் வரவில்லை பணியை வேகப்படுத்த கோரிக்கை
/
அத்திக்கடவு திட்டத்தில் 25 சதவீத குட்டைகளுக்கு நீர் வரவில்லை பணியை வேகப்படுத்த கோரிக்கை
அத்திக்கடவு திட்டத்தில் 25 சதவீத குட்டைகளுக்கு நீர் வரவில்லை பணியை வேகப்படுத்த கோரிக்கை
அத்திக்கடவு திட்டத்தில் 25 சதவீத குட்டைகளுக்கு நீர் வரவில்லை பணியை வேகப்படுத்த கோரிக்கை
ADDED : ஆக 20, 2024 01:52 AM

அன்னுார்:'சோதனை ஓட்டம் துவங்கி, 18 மாதங்களாகியும், 25 சதவீத குட்டைகளுக்கு ஒரு சொட்டு நீர் கூட வரவில்லை,' என அத்திக்கடவு திட்ட ஆர்வலர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய மூன்று மாவட்டங்களில் 1,045 குளம், குட்டைகளில் நீர் நிரப்பும் அத்திக்கடவு அவிநாசி திட்டப் திட்டத்திற்காக 60 ஆண்டுகளாக கொங்கு மண்டல மக்கள் போராட்டம் நடத்தினர்.
இந்நிலையில் திட்ட பணிகள் கடந்த 2019ல் துவங்கியது. 1916 கோடி ரூபாய் மதிப்பிலான இப்பணிகள் கடந்த 2023 பிப்ரவரியில் முடிந்தன. கடந்த, 18 மாதங்களாக சோதனை ஓட்டம் நடைபெற்று வருகிறது.
அத்திக்கடவு திட்ட போராட்ட குழு ஒருங்கிணைப்பாளர்கள் நடராஜன் மற்றும் காளிச்சாமி கூறியதாவது:
இத்திட்டத்தில் அதிகபட்சமாக திருப்பூர் மாவட்டத்தில் 428, ஈரோடு மாவட்டத்தில் 359, கோவை மாவட்டத்தில் 258 குளம், குட்டைகளில் நீர் நிரப்பப்பட உள்ளது. அத்திக்கடவு திட்ட போராட்டம் முழுமையாக அன்னுரை மையமாகக் கொண்டு நடத்தப்பட்டது.
ஆனால் இத்திட்டத்தில் ஈரோடு, திருப்பூர், கோவை ஆகிய மூன்று மாவட்டங்களில், கோவை மாவட்டத்தில் பயன் பெறும் குளங்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டு விட்டது. அன்னுார், எஸ்.எஸ்.குளம், சூலூர், பெரியநாயக்கன்பாளையம், காரமடை ஆகிய ஐந்து ஒன்றியங்களில் உள்ள குளம், குட்டைகளில், 258 ல் மட்டுமே ஐந்தாவது மற்றும் ஆறாவது நீரேற்று நிலையங்கள் வாயிலாக நீர் நிரப்பப்படுகிறது. அதுவும் அன்னுார் ஒன்றியத்தில், இத்திட்டத்தில் சேர்க்கப்பட்ட 180 குளம், குட்டைகளில் 25 சதவீத குட்டைகளில் சோதனை ஓட்டம் நடத்தவில்லை. இதுவரை ஒரு சொட்டு நீர் கூட வரவில்லை.
காட்டம்பட்டி, குப்பேபாளையம், மசக்கவுண்டன் செட்டிபாளையம், பிள்ளையப்பம்பாளையம் என பல ஊராட்சிகளில் ஏராளமான குளம் குட்டைகளில் ஒன்றரை ஆண்டாக ஒரு முறை கூட சோதனை ஓட்டத்தில் தண்ணீர் வரவில்லை.
நேற்று முன்தினம் முதல்வர் திறந்து வைத்த பிறகும் இதுவரை உடைக்கப்பட்ட குழாய்கள் சரி செய்யப்படவில்லை. குளம், குட்டைகளுக்கு தண்ணீர் வரவில்லை. பசூர், அல்ல பாளையம், காரே கவுண்டன் பாளையம் ஆகிய ஊராட்சிகளில் அத்திக்கடவு திட்டத்தில் சேர்க்கப்பட்ட குட்டைகளில் சாதாரணமாக வீட்டில் வரும் அளவுக்கு தான் நீர் வருகிறது. இந்த அளவு நீர் வந்தால் குட்டை நிரம்ப ஆறு மாதங்களாகும். ஆனால் ஆண்டுக்கு 70 நாட்கள் மட்டுமே நீர் விடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
குட்டைகளுக்கு நீர் வரும் குழாய்களில் ஏராளமான இடங்களில் உடைப்பு ஏற்பட்டு, மாத கணக்கில் ஆகிவிட்டது. அவை சரி செய்யப்படவில்லை. அரசு உடனடியாக அன்னுார் ஒன்றியத்தில் இத்திட்டத்தில் சேர்க்கப்பட்ட அனைத்து குட்டைகளுக்கும் அத்திக்கடவு நீர் போதுமான அளவு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு தெரிவித்தனர்.