/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
50 ஆயிரம் வாழை மரங்கள்: சூறாவளி காற்றால் சேதம்
/
50 ஆயிரம் வாழை மரங்கள்: சூறாவளி காற்றால் சேதம்
ADDED : மே 05, 2024 12:34 AM

மேட்டுப்பாளையம்;சிறுமுகை பகுதியில், நேற்று மாலை வீசிய சூறாவளி காற்றால், 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழை மரங்கள் முறிந்து விழுந்தன.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம், காரமடை, சிறுமுகை ஆகிய பகுதிகளில் நேற்று மாலை, 4 மணி அளவில் பத்து நிமிடம் மழை பெய்தது. மழை பெய்யும் முன், வீசிய சூறாவளி காற்றால், சிறுமுகை லிங்காபுரம், காந்தவயல் ஆகிய பகுதிகளில், 50 ஆயிரத்துக்கு மேற்பட்ட வாழை மரங்கள் முறிந்து விழுந்து சேதம் அடைந்தன.
ஜடையம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட மாதனுாரில் ராம்சுந்தர் என்பவர் தோட்டத்தில், 2000 நேந்திரம் வாழை மரங்கள், சூறாவளி காற்றுக்கு முறிந்து விழுந்தன.
இது குறித்து விவசாயிகள் கூறுகையில், 'கடன் பெற்று வாழை பயிர் செய்துள்ளோம். மழை இல்லாததால், குறைவான தண்ணீரை வைத்து, விவசாயம் செய்து வந்த நிலையில், இன்னும் இரண்டு மாதத்தில், அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த, வாழை மரங்கள், சூறாவளி காற்றால் விழுந்து சேதம் அடைந்தன.
இதனால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு விவசாயிகளுக்கும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. வறட்சியான காலத்தில் இயற்கை சீற்றத்தால் ஏற்பட்ட இந்த சேதத்திற்கு, தமிழக அரசு உதவித்தொகை வழங்க வேண்டும்,' என்றனர்.