/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வண்டல் மண் யூனிட்டிற்கு ரூ.500 தர வலியுறுத்தல்
/
வண்டல் மண் யூனிட்டிற்கு ரூ.500 தர வலியுறுத்தல்
ADDED : ஆக 27, 2024 01:27 AM

மேட்டுப்பாளையம்;விவசாய தேவைகளுக்காக, காரமடை வட்டாரத்தில் உள்ள வெள்ளியங்காட்டில் காளியூர் குளம், அருக்காணி குட்டை, பெள்ளாதியில் உள்ள முங்கம்பாளையம் குட்டை உள்ளிட்டவைகளில் தமிழக அரசு வண்டல் மண் எடுக்க அனுமதி அளித்துள்ளது. இதில் விவசாயிகள் முறைப்படி ஆன்லைன் வாயிலாக பர்மிட் பெற்று, வண்டல் மண் எடுத்து வருகின்றனர்.
இதனிடையே காரமடை வட்டாரத்தில் வண்டல் மண் எடுப்பதில், லாரி உரிமையாளர்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. புதுக்கோட்டையை சேர்ந்த குரூப் ஒன்று, வண்டல் மண் யூனிட் ஒன்றுக்கு ரூ.500 தரவேண்டும் என வற்புறுத்துவதாகவும், அப்படி தரவில்லை என்றால், அரசு அதிகாரிகள், போலீஸ் வாயிலாக தொந்தரவு தருவதாகவும், லாரி உரிமையாளர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து, காரமடையை சேர்ந்த லாரி உரிமையாளர் சக்திவேல் கூறுகையில், வெள்ளியங்காடு புதுக்குட்டையில் காரமடையை சேர்ந்த விவசாயி ஒருவருக்கு விவசாய தேவைக்காக வண்டல் மண் எடுக்க முறையான அனுமதி பெறப்பட்டு நேற்று முன் தினம் மண் எடுக்கப்பட்டது. அப்போது லாரி டயர் பஞ்சர் ஆகவே, பஞ்சர் போட நேரம் ஆனது. இரவு நேரம் என்பதாலும், அங்கு வனவிலங்குகள் நடமாட்டம் இருப்பதாலும், லாரியை இயக்கினோம். அப்போது அங்கு வந்த கனிமவளத்துறை அதிகாரிகள், லாரி ஓட்டுனரிடம் பர்மிட் உள்ளதா, ஆவணங்கள் உள்ளதா, ஏன் தாமதம் என ஒரு வார்த்தை கூட கேட்காமல், ஓட்டுனரின் செல்போன்னை வாங்கிவிட்டு, லாரியை காரமடை போலீஸ் ஸ்டேஷன் வர சொல்லிவிட்டனர். அங்கு சென்றால், மண் எடுக்க அனுமதியில்லை. இது கிராவல் மண் எனக்கூறி லாரியை பிடித்து வழக்குப்பதிவு செய்தனர்.
சில நாட்களுக்கு முன், புதுக்கோட்டையை சேர்ந்த குரூப் ஒன்று, விவசாய தேவைகளுக்காக எடுக்கப்படும் வண்டல் மண், கிராவல் மண் என எதுவானாலும், ஒரு யூனிட்டிற்கு ரூ.500 தர வேண்டும் என என்னிடம் கேட்டனர்.
விவசாயிகளுக்கு வண்டல் மண் இலவசமாக தமிழக அரசு வழங்கி வருகிறது. லாரி வாடகை மட்டுமே வசூலிக்கிறோம். அப்படி இருக்க உங்களுக்கு எதற்காக பணம் தர வேண்டும் என மறுத்துவிட்டேன். இதையடுத்து, தற்போது லாரிகள் சிறைபிடிக்கப்படுகின்றன. இதற்கு அரசு அதிகாரிகளும் உடந்தையாக செயல்படுகின்றனர், என்றார்.