/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வாலிபரை கடத்தி தாக்கிய கூலிப்படையினர் 6 பேர் கைது
/
வாலிபரை கடத்தி தாக்கிய கூலிப்படையினர் 6 பேர் கைது
ADDED : ஆக 13, 2024 01:21 AM

பாலக்காடு;பாலக்காடு, பட்டாம்பி அருகே வாலிபரை கடத்தி சென்று தாக்கிய சம்பவத்தில் கூலிப்படையினரை போலீசார் கைது செய்தனர்.
கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், பட்டாம்பி முதுதலை பகுதியைச் சேர்ந்தவர் ரவுப், 25. வெளிநாட்டில் பணியாற்றும் இவர், விடுமுறையில் ஊருக்கு வந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த 9ம் தேதி மாலை, 4:00 மணிக்கு, முதுதலை சந்திப்பில் காரில் வந்த மர்ம கும்பல் இவரை கடத்திச் சென்றது. காரினுள் வைத்தே, ரவுப்பை தாக்கிய கும்பல், சாலையோரம் இறக்கி விட்டு சென்றது.
முதலுதவி சிகிச்சை பெற்ற பின், இச்சம்பவம் குறித்து, பட்டாம்பி போலீசில் ரவுப் புகார் அளித்தார்.
சொரனூர் டி.எஸ்.பி., மனோஜ்குமாரின் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் பத்மராஜன் தலைமையிலான போலீசார் நடத்திய விசாரணையில், ரவுப்பை கடத்தியது கூலிப்படையினர் என்பது தெரியவந்தது.
திருச்சூரை சேர்ந்த கூலிப்படையினர், அஜ்மல் அமீன், 25, முகமது அஷரப் அமான், 22, நிதின், 18, ஹிரண், 23, அகிலேஷ், 20, தேவநாத், 21, ஆகியோர் இருக்கும் இடத்தை கண்டறிந்த போலீசார், நேற்று அவர்களை கைது செய்தனர்.
இது குறித்து, இன்ஸ்பெக்டர் பத்மராஜன் கூறியதாவது:
ரவுப்பின் நண்பர், பைசல். இருவரும் வெளிநாட்டில் ஒரே நிறுவனத்தில் பணியாற்றுகின்றனர். இருவருக்கும் இடையே பணம் கொடுக்கல், வாங்கலில் பிரச்னை ஏற்பட்டுள்ளது. ஊருக்கு வந்த ரவுப்பை, தாக்க கூலிப்படையை ஏற்பாடு செய்துள்ளார் பைசல். தற்போது, கூலிப்படையினர் 6 பேரை கைது செய்துள்ளோம். இந்நிலையில் வெளிநாட்டில் இருக்கும் பைசலையும் கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளோம்.
இவ்வாறு, அவர் கூறினார்.

