/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஆடியில் ஆன்மிக பயணம்; பக்தர்கள் பரவசம்
/
ஆடியில் ஆன்மிக பயணம்; பக்தர்கள் பரவசம்
ADDED : ஜூலை 20, 2024 12:13 AM

பொள்ளாச்சி;ஆடி மாதத்தில் கட்டணமில்லா ஆன்மிக பயணமாக, 37 பேர், பொள்ளாச்சி பகுதியில் உள்ள கோவில்களில், சுவாமி தரிசனம் செய்தனர்.
ஹிந்துசமய அறநிலையத்துறை சார்பில், ஆடி மாதத்தில் புகழ் பெற்ற அம்மன் கோவில்களுக்கு, ஆயிரம் மூத்த குடிமக்களுக்கான கட்டணமில்லா ஆன்மிக பயணம் அழைத்துச் செல்ல தமிழக அரசு மற்றும் அமைச்சர் உத்தரவிட்டார்.
அதில், கோவை மண்டலத்தில், கோவை கோனியம்மன், தண்டுமாரியம்மன், பொள்ளாச்சி மாரியம்மன், அங்காளம்மன், ஆனைமலை மாசாணியம்மன், சூலக்கல் மாரியம்மன் கோவில்களுக்கு ஆன்மிக பயணம் அழைத்துச் செல்ல முடிவு செய்யப்பட்டது.
ஆடி மாத ஆன்மிக பயணம் நான்கு கட்டங்களாக நடக்கிறது. 60 - 70 வயதுக்கு உட்பட்ட மூத்த குடிமக்கள், வரும், 17ம் தேதிக்குள் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்து வாய்ப்பு பெறலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆடி மாத முதல் வெள்ளியான நேற்று முதல் கட்ட பயணமாக, மூன்று வாகனங்களில், 37 பேர் அழைத்து வரப்பட்டனர். கோவை தண்டு மாரியம்மன் கோவிலில் துவங்கி, சூலக்கல் மாரியம்மன் கோவிலுக்கு வந்தனர். அங்கு கோவில் செயல் அலுவலர் கந்தசாமி மற்றும் கோவில் நிர்வாகத்தினர், வரவேற்பு கொடுத்து, சுவாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்தனர்.
தொடர்ந்து, பொள்ளாச்சி மாரியம்மன் கோவிலுக்கு வந்தவர்களை, கோவில் செயல் அலுவலர் சீனிவாச சம்பத் மற்றும் நிர்வாகத்தினர் வரவேற்று, அம்மன் தரிசனம் செய்ய வைத்தனர்.
ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில், அறங்காவலர் குழு தலைவர் முரளிகிருஷ்ணன், உதவி ஆணையர் கைலாசமூர்த்தி மற்றும் அறங்காவலர்கள், செயல் அலுவலர்கள் உள்ளிட்டோர், அவர்களை தரிசனம் செய்ய வைத்து, பிரசாதங்களை வழங்கினர்.
அதிகாரிகள் கூறுகையில், 'ஆடியில் கட்டணமில்லா ஆன்மிக பயணம் முதல்கட்டமாக, 37 பேர் அழைத்து வரப்பட்டனர். அவர்கள் சுவாமி தரிசனம் செய்த பின், பிரசாதங்களும் வழங்கப்பட்டன.
'தண்டு மாரியம்மன் கோவிலில் காலை உணவும், மாசாணியம்மன் கோவிலில் மதிய உணவும் வழங்கப்பட்டது. இந்த பயணம், கோனியம்மன் கோவிலில் நிறைவு செய்யப்பட்டது. அங்கு இரவு உணவு தர ஏற்பாடு செய்யப்பட்டது,' என்றனர்.