/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கட்டுமான பொருள் ஏற்றி வந்த டிராக்டர் பள்ளத்தில் சிக்கி போக்குவரத்து பாதிப்பு
/
கட்டுமான பொருள் ஏற்றி வந்த டிராக்டர் பள்ளத்தில் சிக்கி போக்குவரத்து பாதிப்பு
கட்டுமான பொருள் ஏற்றி வந்த டிராக்டர் பள்ளத்தில் சிக்கி போக்குவரத்து பாதிப்பு
கட்டுமான பொருள் ஏற்றி வந்த டிராக்டர் பள்ளத்தில் சிக்கி போக்குவரத்து பாதிப்பு
ADDED : ஜூலை 08, 2024 01:12 AM

பொள்ளாச்சி;பொள்ளாச்சி நகரில், பத்ரகாளியம்மன் கோவில் வீதி மற்றும் கந்தசாமி பூங்கா ரோடு சந்திப்பில், கட்டடக் கழிவுகள் ஏற்றி வந்த டிராக்டரின் டயர், பள்ளத்தில் இறங்கியதால், போக்குவரத்து தடைபட்டது.
பொள்ளாச்சி நகரில், குறுக்கும், நெடுக்குமாக நகராட்சி ரோடுகள் அமைந்துள்ளன. அவ்வகையில், மார்க்கெட் ரோடு, தெப்பக்குளம் வீதி, கிழக்கு போலீஸ் ஸ்டேஷன் ரோடு, ராஜாமில்ரோடு உள்ளிட்ட பல ரோடுகள், வணிகக் கடைகள் நிறைந்து காணப்படுகின்றன.
கடைகள் ஆக்கிரமிப்பு, விதிமீறி நிறுத்தப்படும் வாகனங்கள், ரோட்டோரக் கடைகள் என, பல்வேறு காரணங்களால், இந்த ரோடுகளில் எப்போதும் வாகன நெரிசல் காணப்படுகிறது.
மேலும், சில பகுதிகளில், புதிய கட்டடங்கள் கட்டுவதற்காக கொண்டு வரப்படும் மணல், ஜல்லி, செங்கல், இரும்பு கம்பிகள் உள்ளிட்ட கட்டுமான பொருட்கள், ரோட்டை ஒட்டிக் கொட்டப்பட்டு இருப்பும் வைக்கப்படுகிறது.
கட்டடங்கள் கட்டுவதற்கு பல மாதங்களாகும் நிலையில், ரோடுகளிலேயே கட்டுமான பொருட்கள் கொட்டி வைக்கப்படுவதால் வாகன ஓட்டுநர்கள் திணறுகின்றனர்.
இதுஒருபுறமிருக்க, சில பகுதிகளில் கட்டடங்கள் இடிக்கப்பட்டு, அதன் கழிவுகள் எடுத்துச் செல்லப்படுகின்றன. மக்கள் நடமாட்டம் உள்ள பகுதிகளைக் கடந்து செல்லும் வாகனங்களில், துாசு பறக்காத வகையில் வலை அமைக்கப்படுவதும் கிடையாது.
நேற்று, பத்ரகாளியம்மன் கோவில் வீதி மற்றும் கந்தசாமி பூங்கா ரோடு சந்திப்பில், கட்டடக் கழிவுகள் ஏற்றி வந்த டிராக்டரின் டயர், பள்ளத்தில் இறங்கியதால், போக்குவரத்து தடைபட்டது.
வாகன ஓட்டுநர்கள் கூறியதாவது: நகரில், ஏற்கனவே, ஆக்கிரமிப்பு காரணமாக ரோடுகள் குறுகி வருகிறது. நெரிசல் மிகுந்த ரோடுகளில் 'பார்க்கிங்' இன்றி கட்டடம் கட்ட அனுமதி அளிப்பது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
கட்டுமானத்தின் போது, கல், மணல், துாசி ஆகியவை மற்ற பகுதிகளுக்கு பரவாமல் இருக்க வலை அல்லது தடுக்கு அமைக்க வேண்டும். இதேபோல, கட்டடக் கழிவுகள் எடுத்துச் செல்லும் வாகனங்களிலும், வலை அமைக்க வேண்டும்.
ஆனால், எவரும், விதிகளைப்பின்பற்றாமல், அலட்சியத்துடன் செயல்படுகின்றனர். பொதுமக்களே பாதிக்கின்றனர்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.