/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'நோட்டா'வுக்கு போடும் ஓட்டால் மாற்றம் வராது! சிந்தித்து ஓட்டளிக்க சீமான் பேச்சு
/
'நோட்டா'வுக்கு போடும் ஓட்டால் மாற்றம் வராது! சிந்தித்து ஓட்டளிக்க சீமான் பேச்சு
'நோட்டா'வுக்கு போடும் ஓட்டால் மாற்றம் வராது! சிந்தித்து ஓட்டளிக்க சீமான் பேச்சு
'நோட்டா'வுக்கு போடும் ஓட்டால் மாற்றம் வராது! சிந்தித்து ஓட்டளிக்க சீமான் பேச்சு
ADDED : ஏப் 12, 2024 01:36 AM

பொள்ளாச்சி;''யாருக்கும் ஓட்டு போட மாட்டோம் என்று, 'நோட்டா'வுக்கு ஓட்டு போட்டால் எந்த மாறுதலும் வராது. மதிப்புமிக்க ஓட்டை அறிவுப் பூர்வமாக சிந்தித்து பதிவு செய்யுங்கள்,'' என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசினார்.
நாம் தமிழர் கட்சியின், பொள்ளாச்சி வேட்பாளர் சுரேஷ்குமாரை ஆதரித்து, பல்லடம் ரோடு சந்திப்பில், கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதாவது:
அதிகாரத்தில் இருப்பவர்கள், நம் மொழி, இனம், நிலத்தை எல்லாம் பாதுகாத்து, அடுத்த தலைமுறைக்கு ஒப்படைப்பார்கள் என்று நம்பி இருந்தோம். ஆனால், இவை எல்லாம் ஏமாற்று வேலை.
அவர்களுக்கு நம்மை ஆள வேண்டும் என்ற பதவி வெறி மட்டுமே உள்ளது. தமிழனம் வாழ்வதற்கான எண்ணம் துளியும் கிடையாது. அதிகாரத்தில் உள்ளவர்களிடம், நம் உரிமைக்காக என்ன கத்தினாலும், அவர்களுக்கு கேட்காது. மக்கள் நலன் சார்ந்து சிந்திப்பது கிடையாது.
மக்கள், பொறுப்பு மற்றும் கடமை உணர்வுடன் இந்த தேர்தலை அணுக வேண்டும். இங்கு யாரும் புதியவர்கள் இல்லை. பல முறை ஆட்சி செய்தவர்கள். அவர்களின் ஆட்சி அதிகாரத்தில் இருந்ததால் அடைந்த பயன் ஒன்றும் கிடையாது. திராவிட கட்சிகள் மாறி மாறி ஆட்சி செய்தும், ஆயிரம் ரூபாய் வழங்கி சாதனை என்கின்றனர். பெண்களை கையேந்த வைத்தது வேதனை.
யாருக்கும் ஓட்டு போட மாட்டோம் என்று, தேர்தலை புறக்கணிக்கும் வகையில் 'நோட்டா'வுக்கு ஓட்டு போடாதீங்க. இதனால், எந்த மாறுதலும் வராது. ஒரு ஓட்டு கூட வெற்றியை தீர்மானிக்கும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். மதிப்புமிக்க ஓட்டை அறிவுப் பூர்வமாக சிந்தித்து பதிவு செய்யுங்கள்.
இவ்வாறு, அவர் பேசினார்.
உடுமலை
உடுமலையில் சீமான் பேசியதாவது:
ஆசிரியர்கள், மீனவர்கள், போக்குவரத்துக்கழக தொழிலாளர்கள் என அனைத்து தரப்பினரும் போராடி வரும் நிலையில், மாநிலத்தில் நல்லாட்சி நடப்பதாக கூறுவது, கேலிக்கூத்தாகும். மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வால் மக்கள் பாதித்துள்ளனர்.
மத்திய அரசு குழந்தைகள் சாப்பிடும் பிஸ்கட்டிற்கு, 18 சதவீதம் ஜி.எஸ்.டி., வரி விதிக்கிறது. ஆனால், மூன்று நாட்கள் தீவிர ஆலோசனை செய்து, தங்க பிஸ்கட்டிற்கு, 3 சதவீதம் வரி விதிக்கப்படுகிறது. யாருக்கான ஆட்சி என்பதை மக்கள் உணர வேண்டும்.
அ.தி.மு.க., - தி.மு.க., - பா.ஜ., என கட்சிகள் கொள்ளையடிக்கின்றன. அதையும், சாட்சிகள் இல்லாமல் செய்தால், தப்பில்லை என்பதே நீதி. மக்கள் மீது வரிகளை மட்டுமே பா.ஜ., திணிக்கிறது. அரிசி, பருப்பு, எண்ணெய், பெட்ரோல், டீசல், சமையல் காஸ் விலையும் உயர்ந்துள்ளது. அடிப்படை கட்டமைப்பை மாற்ற வேண்டும்.
இவ்வாறு, பேசினார்.

