/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பழுதான கேமராக்கள் மாயம் பராமரிக்க நடவடிக்கை தேவை
/
பழுதான கேமராக்கள் மாயம் பராமரிக்க நடவடிக்கை தேவை
ADDED : பிப் 28, 2025 10:46 PM

பொள்ளாச்சி; பொள்ளாச்சி பகுதியில் பராமரிப்பு இல்லாத கண்காணிப்பு கேமராக்கள் மாயமாகி வருவதாக புகார் எழுந்துள்ளது. மேலும்,குற்ற சம்பவங்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளதால் சீரமைக்க கோரிக்கை எழுந்துள்ளது.
பொள்ளாச்சி நகரில், போக்குவரத்து விதிமீறி செல்லும் வாகனங்கள், ஒரு வழிப்பாதையில் செல்லும் வாகனங்கள், 'நோ பார்க்கிங்' பகுதிகளில் நிறுத்தப்படும் வாகனங்களால், நெரிசல் மற்றும் சிறு குற்றங்கள் எண்ணிக்கை அதிகரிக்கிறது.
விதிமுறை மீறல், குற்றங்களில் ஈடுபடுவோரை கண்டறியும் வகையில், போலீசார், தன்னார்வலர்கள் உதவியுடன் முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்களை வைத்தனர். இவற்றின் வாயிலாக குற்ற சம்பவங்களில் ஈடுபடுவோரை கண்டறிய போலீசாருக்கு உதவியாக இருந்தது.
இந்நிலையில், நகரின் பல இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் வெறும் காட்சிப்பொருளாக மாறியுள்ளன. ஒரு சில இடங்களில் கேமராக்கள் வைக்கப்பட்ட கம்பங்கள் சரிந்து எப்போது வேண்டுமென்றாலும் விழும் நிலை உள்ளன.
அதில், பொள்ளாச்சி நகராட்சி அலுவலகம் எதிரே, லயன்ஸ் கிளப் அருகே போலீசார் சார்பில் அமைக்கப்பட்ட கண்காணிப்பு கேமரா கம்பம் சாய்ந்து கிடந்தது. அதை சரி செய்ய போலீசார் நடவடிக்கை எடுக்காததால், அதில் இருந்த மூன்று கேமராக்கள் மாயமாகியுள்ளதாக கூறப்படுகிறது.
சமூக ஆர்வலர்கள் கூறுகையில், 'கண்காணிப்பு கேமராக்கள் போதிய பராமரிப்பின்றி இருப்பதுடன், கம்பங்களும் ஆங்காங்கே சாய்ந்து கிடக்கின்றன.பொள்ளாச்சி நகராட்சி அலுவலகம் எதிரே, சாய்ந்து கிடந்த கம்பத்தில் இருந்த, நான்கு கேமராக்களில், மூன்று கேமராக்கள் மாயமாகியுள்ளன. கேமராக்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளது. குற்ற சம்பவங்கள் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளன.
இதுபோன்று பயன்பாடு இல்லாத கேமராக்கள் மாயமாவதை தடுக்க, அதிகாரிகள் கண்காணிப்பு செய்து, அவற்றை பராமரித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்,' என்றனர்.