ADDED : ஜூலை 27, 2026 03:32 PM
மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாண்ட் கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க, நகராட்சி கமிஷனர் அமுதா, ஒப்பந்ததாரரிடம் அறிவுறுத்தினார்.
நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தில், ரூ.8.63 கோடி மதிப்பில், இரண்டரை ஆண்டுகளுக்கு முன், மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாண்ட் கட்டுமான பணிகள் துவங்கின. கடைகள், பஸ்கள் நிறுத்தும் இடம், ஓடுதளம், கழிப்பறைகள், பயணிகள் நிழற்கூடம், ஓய்வறைகள், பொருட்கள் பாதுகாப்பு அறைகள், மழைநீர் வடிகால் ஆகியவை கட்ட திட்டமிடப்பட்டது.
முதற்கட்டமாக, கோவை, திருப்பூர், சத்தியமங்கலம், ஈரோடு ஆகிய பஸ்கள் நிறுத்தப்படும் பகுதியில் பணிகள் முடிக்கப்பட்டன. இரண்டாவதாக, டவுன் பஸ்கள் நிற்கும் இடத்தில் துவங்கிய பணிகள், மெதுவாக நடக்கின்றன. மேட்டுப்பாளையம் நகராட்சி கமிஷனர் அமுதா, இப்பணிகளை ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என, ஒப்பந்ததாரரிடம் அறிவுறுத்தினார்.
