/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அத்திக்கடவு திட்டத்தை உடனே செயல்படுத்துங்கள் போராட்ட குழு வலியுறுத்தல்
/
அத்திக்கடவு திட்டத்தை உடனே செயல்படுத்துங்கள் போராட்ட குழு வலியுறுத்தல்
அத்திக்கடவு திட்டத்தை உடனே செயல்படுத்துங்கள் போராட்ட குழு வலியுறுத்தல்
அத்திக்கடவு திட்டத்தை உடனே செயல்படுத்துங்கள் போராட்ட குழு வலியுறுத்தல்
ADDED : ஆக 03, 2024 05:30 AM
அன்னுார்: பவானிசாகர் அணை நீர் மட்டம் 93 அடிக்கு மேல் அதிகரித்துள்ளதால் அத்திக்கடவு திட்டத்தை உடனே செயல்படுத்த வேண்டும் என அத்திக்கடவு போராட்டக் குழு வலியுறுத்தி உள்ளது.
அத்திக்கடவு அவிநாசி திட்ட போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர்கள் நடராஜன், காளிச்சாமி, கணேசன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை :
கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய மூன்று மாவட்டங்களில் 1044 குளம், குட்டைகளில் நீர் நிரப்பும் அத்திக்கடவு அவிநாசி திட்டப்பணிகள் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு துவங்கியது. 1,862 கோடி ரூபாயிலான இந்தத் திட்டத்தில் ஆறு நீரேற்று நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பிரதான குழாய்கள், கிளை குழாய்கள் அனைத்தும் பதிக்கப்பட்டு விட்டன.
கடந்த 2023 பிப்ரவரியில் சோதனை ஓட்டம் துவங்கியது. ஒன்றரை ஆண்டாக குளம், குட்டைகளுக்கு தண்ணீர் விட்டு சோதனை ஓட்டம் நடைபெற்று வருகிறது.
கடந்த ஓராண்டாக மழை இல்லை. ஆற்றில் தண்ணீர் இல்லை என்று அமைச்சர்களும், அதிகாரிகளும் காரணம் கூறி வந்தனர். தற்போது கேரள மாநிலத்திலும், மேற்கு தொடர்ச்சி மலையிலும் பவானி ஆற்றின் நீர் பிடிப்பு பகுதிகளிலும் அதிக அளவில் மழை பெய்து வருகிறது. பில்லுார் அணை நிரம்பியுள்ளது. பவானிசாகர் அணையில் 93.18 அடி அளவுக்கு தண்ணீர் வந்துள்ளது. பவானி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து செல்வதால் பொதுமக்கள் ஆற்றில் இறங்க வேண்டாம் என அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
தற்போது பவானி ஆற்றில் செல்லும் நீர் காவிரி ஆற்றில் கலந்து வீணாக கடலில் கலக்கும் வாய்ப்பு உள்ளது. எனவே தமிழக அரசு உடனடியாக இந்த நீரை காளிங்கராயன் அணைக்கட்டில் தேக்கி, ஆறு நீரேற்று நிலையங்கள் வழியாக கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய மூன்று மாவட்டங்களில் உள்ள 1044 குளம் குட்டைகளை நிரப்ப வேண்டும்.
இந்த திட்டத்திற்காக 60 ஆண்டுகளாக கடையடைப்பு, காலவரையற்ற உண்ணாவிரதம், நடைப்பயணம் என பல்வேறு போராட்டங்கள் நடத்தியுள்ளோம். எனினும் பணிகள் முடிந்து ஒன்றரை ஆண்டு ஆகியும் செயல்படுத்தப்படாமல் இருப்பது ஏன் என்று தெரியவில்லை.
இத்திட்டம் செயல்படுத்தப்பட்டால் மூன்று மாவட்டங்களில் தரிசு நிலங்கள் விவசாய நிலங்களாக மாறும். கால்நடை வளர்ப்புஅதிகரிக்கும். அரசு விரைவில் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.
இவ்வாறு அத்திக்கடவு ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.