/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஈசா யோக மையம் சார்பில் அக்ரி ஸ்டார்ட் அப் கண்காட்சி
/
ஈசா யோக மையம் சார்பில் அக்ரி ஸ்டார்ட் அப் கண்காட்சி
ஈசா யோக மையம் சார்பில் அக்ரி ஸ்டார்ட் அப் கண்காட்சி
ஈசா யோக மையம் சார்பில் அக்ரி ஸ்டார்ட் அப் கண்காட்சி
ADDED : ஆக 15, 2024 11:56 PM

கோவை : ஈஷா யோக மையத்தின் சார்பில் 'கனவு மெய்ப்பட வேண்டும்' அக்ரி ஸ்டார்ட் அப் திருவிழா கோவை சின்னியம்பாளையத்தில் உள்ள பிருந்தாவன் அரங்கில் நேற்று நடந்தது.
கண்காட்சியில், வேளாண் பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. சிறுதானியங்கள், பழங்கள், கீரை வகைகள், நாட்டு சர்க்கரை உள்ளிட்ட வேளாண் பொருட்களை பயன்படுத்தி 150க்கும் மேற்பட்ட ஐஸ்க்ரீம் வகைகள் பார்வையாளர்களை கவர்ந்தன. சிறு தானிய பிஸ்கட், காய்கறிகளில் செய்யப்படும் பீட்ரூட் மால்ட், கேரட் மால்ட், கஞ்சி மாவு, செவ்வாழை மால்ட், சர்க்கரையை கட்டுப்படுத்தும் டீ உள்ளிட்ட பல பொருட்களும் இடம் பெற்றிருந்தன. வாழையின் ஒவ்வொரு பகுதியிலும் செய்யப்பட்ட பொருட்கள், தேங்காய் ஓடுகள், ஓலைகள், நார்களில் செய்யப்பட்ட பொருட்கள் காட்சிப்படுத்தட்டிருந்தன.
விழாவில், கோவை கொடிசியா முன்னாள் தலைவர் வரதராஜன் பேசியதாவது:
கனவு மெய்ப்பட வேண்டும் என்ற பாரதியின் கனவுகள் நிறைவேறினால், இந்தியா வல்லரசாக மாறி விடும். நாடு சுதந்திரம் அடைந்தபோது, நாட்டில் விவசாயம் இல்லை. உணவுக்கே போதுமான வழியில்லை. அவற்றையெல்லாம் கடந்து அடுத்த 25 ஆண்டுகளில் பசுமை புரட்சி ஏற்பட்டு, தற்போது ஏற்றுமதி செய்யும் அளவுக்கு வளர்ச்சி பெற்றுள்ளோம். இருந்தாலும் விவசாயிகளின் நிலை அப்படியே தான் உள்ளது.
இதே கோவையில், 30 ஆண்டுகளுக்கு முன் 20 ஆயிரம், 30 ஆயிரம் ரூபாய் முதலீடுகள் செய்து கம்பெனிகளை ஆரம்பித்த பலர், ஆயிரம் கோடிகளில் வணிகம் செய்கின்றனர். விவசாயிகள் தங்களது சொந்த நிலங்களை 20 ஆண்டுகளுக்கு முன் ஏக்கர் 10 லட்ச ரூபாய்க்கு விற்றனர். விவசாயி விற்றபின் அவை பல மடங்கு விலை உயர்வு பெற்றது. விவசாயி, தன் நிலத்தை விற்பனை செய்யாமல் இருந்தால் மட்டுமே அது சொத்தாக இருக்கும். விவசாயம் செய்து அவர்களால் சம்பாதிக்க முடியாது.
எனவே, விவசாய பொருட்களை மதிப்பு கூட்டி விற்பனை செய்து, அவற்றை வெளிநாடுகளில் சந்தைப்படுத்தினால் விவசாயத்தில் திருப்பு முனை வரும் என எதிர்பார்க்கலாம். அதற்கான அக்ரி ஸ்டார்ட் அப் நிகழ்வை ஈஷா வழங்கியதோடு, உதவிகளையும் செய்வதை வரவேற்க வேண்டும்.
தமிழ்நாட்டில் முதலீடுகள் வருவதாக அரசு பெருமை கொள்கிறது. சமீபத்தில் மாநில அரசு 15 நிறுவனங்கள், 47 ஆயிரம் கோடியில் முதலீடுகளை ஈர்த்துள்ளதாக தெரிவித்துள்ளது. இதனால் 27 ஆயிரம் பேருக்கு வேலை கிடைப்பதாக சொல்கிறது. ஒருவருக்கு வேலையை உருவாக்க 2 கோடி ரூபாய் செலவாகிறது என்பது சற்று அதிகமாகவே தெரிகிறது. இத்தகைய முதலீட்டால் மக்களுக்கு பயன் கிடைக்கப்போவதில்லை.
இவ்வாறு, வரதராஜன் பேசினார்.
இதில், அக்ரி ஸ்டார்ட் அப் தொழிலில் வெற்றி பெற்றவர்களுக்கு விருதுகளும் பாராட்டுக்களும் வழங்கப்பட்டன. வேளாண் விளைபொருள் சார்ந்த தயாரிப்புகளுக்கு கடனுதவிகள் குறித்து நபார்டு வங்கியின் மேலாளர் திருமலா ராவ் விளக்கினார். வேளாண் தொழில் சார் வணிக தொழில்நுட்பம் குறித்து, தமிழ்நாடு வேளாண்மை பல்கலையின் வேளாண் வணிக துறை தலைவர் ஞானசம்பந்தம் விளக்கினார். மேகாலயாமுன்னாள் கவர்னர் சண்முகநாதன், ஈஷா கனவு மெய்ப்பட வேண்டும் ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீமுகா, முத்துக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். -

