/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
யானை நடமாட்டம் அறிய ஏ.ஐ., கேமரா முதல் கட்ட சோதனை வெற்றி
/
யானை நடமாட்டம் அறிய ஏ.ஐ., கேமரா முதல் கட்ட சோதனை வெற்றி
யானை நடமாட்டம் அறிய ஏ.ஐ., கேமரா முதல் கட்ட சோதனை வெற்றி
யானை நடமாட்டம் அறிய ஏ.ஐ., கேமரா முதல் கட்ட சோதனை வெற்றி
ADDED : மே 17, 2024 10:43 PM

பாலக்காடு;குடியிருப்பு பகுதிக்குள் இறங்கும் வனவிலங்குகளின் பயண பாதை தெரிந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பதற்கு எ.ஐ., (செயற்கை நுண்ணறிவு) கேமரா பொருத்தும் திட்டம் வருகின்றன.
கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், கொட்டேக்காடு முதல் கஞ்சிக்கோடு வரை உள்ள குடியிருப்பு பகுதிகளில், காட்டு யானைகள் முகாமிடுவது சமீப காலமாக அதிகரித்துள்ளது. இதனால், அப்பகுதி மக்கள் பீதியில் உள்ளனர்.
சமீபத்தில், கொட்டேக்காடு ரயில்வே ஸ்டேஷன் அருகே, இரு காட்டு யானைகள் ரயிலில் அடிபட்டு இறந்தன. மேலும், செய்தி சேகரிக்க சென்ற, நியூஸ் சேனல் வீடியோகிராபர் யானை தாக்கி இறந்தார்.
இதையடுத்து, ரயில்வே, -வனஅதிகாரிகள் ஒருங்கிணைந்து நடத்திய ஆலோசனை கூட்டத்தில், இப்பிரச்னைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில், வனவிலங்குகளின் பயண பாதை தெரிந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பதற்காக ஏ.ஐ., (செயற்கை நுண்ணறிவு) கேமராக்கள் பொருத்த திட்டமிடப்பட்டது. அதில், முதல் கட்ட சோதனை வெற்றிகரமாக நேற்று நடந்தது. இத்திட்டம் குறித்து, கண்ணூரை மையமாகக் கொண்டு செயல்படும் கூட்டுறவு நிறுவனமான 'கேரளா தினேஷ் ஐ.டி., சிஸ்டம்' ஆப்பரேஷன் ஹெட் அபிலாஷ் ரவீந்திரன் கூறியதாவது:
'டிஜிட்டல் அக்வாஸ்டிக் சென்சிங் (டி.எ.எஸ்.,) என்ற தொழில்நுட்பத்தின் உதவியுடன் கூடிய கேமரா, சோதனை பாலக்காடு --கஞ்சிக்கோடு வழித்தடத்தில் உள்ள பன்னிமடை வனத்தில் பொருத்தப்பட்டு, முதல் கட்ட சோதனை நடந்தது.
பூமிக்குள் ஒரு மீட்டர் ஆழத்தில் குழி தோண்டி அமைக்கப்பட்ட பைபர் கேபிள் வாயிலாக கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அனுப்பப்படுகிறது. இரவும், பகலும் பதிவு செய்யும் தெர்மல் கேமராவின் சோதனையும் நடந்தது.
வனத்துறையின் யானைகள் பராமரிப்பு மையத்தில் உள்ள 'அகஸ்தியன்' என்ற கும்கி யானையை பயன்படுத்தி, வெற்றி கரமாக சோதனை நடந்தது.
மனிதர்கள் அல்லது விலங்குகள் நடக்கும்போது ஏற்படும் அதிர்வுகளை, 'ஆப்டிகல் பைபர் கேபிள்' வாயிலாக செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான மென்பொருளில் பகுப்பாய்வு செய்து தகவலை வழங்கப்படும்.
இது, கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ள வனத்துறை ஊழியர்களுக்கு வாட்ஸ் ஆப், டெலிகிராம், எஸ்.எம்.எஸ்., இ--மெயில் ஆகியவை வாயிலாக தெரிவிக்கப்படும். விலங்குகளின் சரியான இடத்தை ஜி.பி.எஸ்., போன்ற அமைப்புகள் வாயிலாக தெரிய முடியும். ஆஸ்திரேலிய தொழில்நுட்பம் கொண்ட இந்த அமைப்பு, நாட்டின் வடகிழக்கு மாநிலங்களில் பயன்படுத்தப்படுகிறது.
வடக்கு ரயில்வேயும் இந்த முறையை பின்பற்றி வருகிறது. பன்னிமடை வனப்பகுதியில் நான்கு கேமராக்கள் சோதனை அடிப்படையில் பொருத்தப்பட்டுள்ளன. வனத்துறையின் கிழக்கு மண்டல வன அதிகாரியின் அனுமதி உடன் இத்திட்டத்தின் சோதனை நடந்தது. இவ்வாறு, அவர் கூறினார்.
இந்த அமைப்பின் செயல்திறனை உறுதி செய்த பின், மற்ற பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்படும், என, வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

