மருந்தகங்களில் உதவியாளர் பற்றாக்குறை தனியே...தன்னந்தனியே!:ஆளின்றி திணறும் கால்நடை மருத்துவர்கள்
மருந்தகங்களில் உதவியாளர் பற்றாக்குறை தனியே...தன்னந்தனியே!:ஆளின்றி திணறும் கால்நடை மருத்துவர்கள்
UPDATED : ஆக 01, 2026 05:23 AM
ADDED : ஜூலை 31, 2026 07:51 PM

கோவை: கால்நடை மருந்தகங்களில் 52 உதவியாளர்கள் பற்றாக்குறையால் மருத்துவர்களே சினை ஊசி செலுத்துதல், கழிவுகளை சுத்தம் செய்தல் போன்ற பணிகளை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
கோவையில் 59, பொள்ளாச்சியில் 39 மருந்தகங்கள், பன்முக மருத்துவமனை, கிளை நிலையங்கள் என, மாவட்டத்தில் 118 கால்நடை சிகிச்சை மையங்கள் உள்ளன. 2.32 லட்சம் கால்நடைகளுக்கு இங்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இதில் உதவியாளரின் பங்கு முக்கியம். இவர்கள் கால்நடைகளுக்கு தடுப்பூசி, அறுவை சிகிச்சை, செயற்கை கருவூட்டல், கண்காணித்தல் போன்ற வேலைகளுக்கு, மருத்துவர்களுக்கு உதவுகின்றனர்.
மருந்து எடுத்து தருதல், மருத்துவ கருவிகளை சுத்தம் செய்தல், சுடுதண்ணீர் வைப்பது போன்ற பணிகளையும் செய்கின்றனர்.
தற்போது கோமாரி நோய் தடுப்பூசி முகாம், கால்நடை துறையை டிஜிட்டல் மயமாக்க, விவசாயிகள், கால்நடைகளின் விபரங்கள் பதிவேற்றம் செய்யும் வேலைகளும் நடக்கின்றன. மருந்தகங்களில் 52 உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளது கூடுதல் சுமையை தந்துள்ளது.
'மாநிலம் முழுவதும் 50 சதவீத உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன. கால்நடைகளை தனியே சமாளிக்க முடிவதில்லை. சினை ஊசி, 'குளூக்கோஸ்' செலுத்தும்போது உதவியாளர்கள் அவசியம் தேவை. முகாம் சமயத்தில் பெரும் சிரமங்களை சந்திக்கிறோம்.
பணிகள் முடிந்து கோமியம், சாணம் சுத்தம் செய்யும் வேலைகளையும் நாங்களே செய்கிறோம். மாவட்டத்தில் 70 பெண் மருத்துவர்கள் உள்ளனர். அவர்களுக்குதான் சிரமம் அதிகம்.
எனவே, அரசு காலியிடங்களை சீக்கிரம் நிரப்ப வேண்டும். மருந்தகங்கள் அனைத்திலும் தண்ணீர் வசதி, கழிப்பறை வசதியை மேம்படுத்த வேண்டும்' என்கின்றனர் கால்நடை மருத்துவர்கள்.
அமைச்சருக்கு தகவல்
கால்நடை பராமரிப்பு துறை இணை இயக்குனர் மகாலிங்கத்திடம் கேட்டபோது, ''முன்பு நீதிமன்ற வழக்கு இருந்ததால் ஆட்கள் எடுக்க முடியவில்லை. தற்போது வழக்கு முடிந்துவிட்டது. துறை அமைச்சரின் கவனத்துக்கும் இப்பிரச்னையை கொண்டு சென்றுள்ளோம். கூடிய விரைவில் ஆட்கள் எடுப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்,'' என்றார்.
சமீபத்தில் கோவையில் ஆய்வுக்கூட்டம் நடத்திய துறை அமைச்சர் கமலி காதுக்கு இப்பிரச்னையை கொண்டு சென்றுள்ளனர்.
அவர் கண்டிப்பாக நடவடிக்கை எடுப்பார் என காத்திருக்கின்றனர் இத்துறையினர்.
