/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அமோனியா காஸ் கசிவு விவகாரம்; கம்பெனிக்கு சீல் வைப்பு
/
அமோனியா காஸ் கசிவு விவகாரம்; கம்பெனிக்கு சீல் வைப்பு
அமோனியா காஸ் கசிவு விவகாரம்; கம்பெனிக்கு சீல் வைப்பு
அமோனியா காஸ் கசிவு விவகாரம்; கம்பெனிக்கு சீல் வைப்பு
ADDED : மே 01, 2024 05:27 AM

மேட்டுப்பாளையம் : காரமடை அருகே உள்ள சென்னி வீரம் பாளையம் கிராமத்தில் தனியார் சிப்ஸ் தயாரிக்கும் கம்பெனியில், நேற்று முன் தினம் இரவு, அமோனியா கசிவு காரணமாக பொதுமக்களுக்கு மூச்சு திணறல் மற்றும் கண் எரிச்சல் பாதிப்புகள் ஏற்பட்டது. இதையடுத்து வருவாய் துறையினர் கம்பெனிக்கு சீல் வைத்தனர். 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கோவை மாவட்டம் காரமடை அருகே சென்னிவீரம்பாளையத்தில் செயல்படாத தனியார் உருளைக்கிழங்கு சிப்ஸ் தயாரிக்கும் கம்பெனி உள்ளது. இந்த கம்பெனி கடந்த 8 ஆண்டுகளாக செயல்படாமல் இருந்து வந்தது. இந்நிலையில், இந்த கம்பெனியை அவினாசியை சேர்ந்த அசிக் முகமது என்பவர் விலைக்கு வாங்கி உள்ளார். இதையடுத்து, அண்மையில் மீண்டும் கம்பெனி திறக்கப்பட்டு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதையடுத்து நேற்று முன் தினம் இரவு இப்பணிகள் நடந்த போது, கம்பெனியில் வைக்கப்பட்டிருந்த, சுமார் 300 கிலோவுக்கும் மேற்பட்ட அமோனியா காஸ் சிலிண்டரில் இருந்து, திடீரென கசிவு ஏற்பட்டு அந்த பகுதி முழுவதும் பரவியது.
இதனால் அப்பகுதியில் உள்ள 300க்கும் மேற்பட்ட வீடுகளில், இருந்த பொது மக்களுக்கு மூச்சுத் திணறல் மற்றும் கண் எரிச்சல் உள்ளிட்ட உபாதைகள் ஏற்பட்டது. இதனால் வீடுகளை விட்டு வெளியேறி தொலைவில் உள்ள இடங்களுக்கு சென்றனர். மேலும், இக்கம்பெனி இங்கு செயல்படக்கூடாது, மூடி சீல் வைக்கப்பட வேண்டும் என பொதுமக்கள் கம்பெனியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
இதனிடையே நேற்று கோவை மாவட்ட வடக்கு வருவாய் கோட்டாட்சியர் கோவிந்தன் தலைமையில், மேட்டுப்பாளையம் தாசில்தார் சந்திரன் உள்ளிட்ட வருவாய் துறை அதிகாரிகள், போலீசார் உள்ளிட்டோர் மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மக்கள் அதிகாரிகளை முற்றுகையிட்டு, வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். நேற்று முன் தினம் இரவு மருத்துவ குழுவினர் மக்களுக்கு முறையான பரிசோதனைகள் செய்யவில்லை, கம்பெனியை உடனே மூட வேண்டும், என அதிகாரிகளிடம் மக்கள் புகார் தெரிவித்தனர்.
இதையடுத்து உடனடியாக மருத்துவ குழுவினர் வரவழைக்கப்பட்டு, வீடு வீடாக சென்றும், கம்பெனி அருகே உள்ள அரசு துவக்கப்பள்ளியிலும் பொது மக்களுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொண்டனர். மேலும், கம்பெனியில் ஆய்வு மேற்கொண்டு, உடனடியாக சீல் வைக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தனர். பின் முற்றுகையிட்ட மக்கள் கலைந்து சென்றனர்.
அதன்பின் வடக்கு வருவாய் கோட்டாட்சியர் கோவிந்தன், உள்ளூர் மக்கள் 5 பேர், மேட்டுப்பாளையம் தாசில்தார் சந்திரன், தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார பாதுகாப்பு இணை இயக்குனர் சீனிவாசன், போலீசார் உள்ளிட்ட அதிகாரிகள் கம்பெனிக்குள் சென்று, அமோனியா காஸ் கசிந்த இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர். சம்பவ இடத்திற்கு மேட்டுப்பாளையம் எம்.எல்.ஏ., செல்வராஜ், சிக்காரம்பாளையம் ஊராட்சி தலைவர் ஞானசேகரன் உள்ளிட்டோரும் வந்து அதிகாரிகளிடம் விவரங்களை கேட்டறிந்தனர். பின் சுமார் 300 கிலோ, அமோனியா காஸ் அங்கிருந்து, தொழில்நுட்ப வல்லுநர்களின் அறிவுரையின்பேரில், வேறு ஒரு இடத்திற்கு அப்புறப்படுத்தப்பட்டு, கம்பெனிக்கு சீல் வைக்கப்பட்டது.
வருவாய் துறை அதிகாரிகளின் விசாரணையில், கம்பெனி மீண்டும் திறப்பதற்கான அரசு அனுமதி எதுவும் பெறப்படவில்லை என தெரியவந்தது. இதையடுத்து அமோனியா காஸ் கசிவு விவகாரத்தில் 5 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதியில் 100க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.