/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சமாளிக்க கூலா வாங்கலாம் ஒரு ஏ.சி.,!
/
சமாளிக்க கூலா வாங்கலாம் ஒரு ஏ.சி.,!
ADDED : மே 01, 2024 11:44 PM

கோவை : வெயில் தாக்கம் நாளுக்கு நாள், அதிகரித்து வருகிறது. வெயிலின் வெப்பத்தை சமாளிக்க, மின்விசிறி, ஏர் கூலர்கள் என எத்தனை வந்தாலும், இன்று எல்லோருடைய ஓட்டும் ஏ.சி.,க்குதான். அத்தனை வெப்பம்!
முன்எப்போதையும் விட இந்தாண்டு ஏ.சி., விற்பனை இரு மடங்கு உயர்ந்துள்ளது.
சரி, ஒரு ஏ.சி., வாங்கும் முன் என்னென்ன கவனிக்க வேண்டும் என்று, மெக்கானிக் அருள்குமாரிடம் கேட்டோம். பிரித்து மேய்ந்து விட்டார் மனுஷன்!
ஏ.சி., வாங்கும் முன்...!
ஏ.சி.,களில், 'விண்டோ', 'ஸ்பிளிட்' என இரு வகைகள் உள்ளன. ஸ்பிளிட் ஏசிகளுடன் ஒப்பிடும் போது, விண்டோ வகை மலிவானவை. பொருத்துவதும் எளிது.
ஆனால், ஸ்பிளிட் ஏ.சி., கள் சத்தம் குறைவு, அதிக குளிரூட்டும் திறனால் அதிகம் விரும்பப்படுகின்றன. குறிப்பாக, இவற்றின் பராமரிப்பு மிகவும் எளிது. இன்வெர்ட்டர் அல்லாத மற்றும் இன்வெர்ட்டர் ஸ்பிளிட் ஏ.சி., என இருவகைகள் உள்ளன. இன்வெர்ட்டர் ஏ.சி., குளிர் திறன் அதிகமாகவும், மற்றும் மின் நுகர்வு குறைவாகவும் இருக்கும்.
கூலிங் திறன் முக்கியம்
ஏ.சி.,கள் நான்கு வெவ்வேறு அளவுகளில்(குளிரூட்டும் திறனின் அடிப்படையில்) கிடைக்கின்றன. ஒரு ஆரம்ப கட்ட நிலை ஏ.சி., 0.8- டன் குளிரூட்டும் திறனைக் கொண்டிருக்கும், இது, 2 டன்கள் வரை செல்லும்.
எந்த அறைக்கு எந்த ஏ.சி.,
அறையின் அளவை பொறுத்து, எத்தனை டன் ஏ.சி., வேண்டும் என்பதை உறுதி செய்வது நல்லது. 100 - 120 சதுர அடி அறைக்கு, 1 டன், 120 - 180 சதுர அடி அறைக்கு, 1.5 டன் ஏ.சி., 180 - 240 சதுர அடி அறைக்கு, 2 டன் ஏ.சி., பொருந்தும்.
மின்சாரத்தை மிச்சப்படுத்த டெம்பரேச்சரை 24 என்ற அளவில் வைப்பதே சரியானது
பராமரிப்பு முக்கியம்
ஏ.சி., நன்றாக இயங்கினாலும், ஆண்டுக்கு ஒருமுறை சர்வீஸ் செய்ய வேண்டும். மூன்று மாதத்துக்கு ஒரு முறை, ஏ.சி., யின் காற்று வடிகட்டியை சுத்தப்படுத்துவது அவசியம். சரியான கால இடைவெளியில் ஏ.சி., பழுது பார்ப்பது, தேவையற்ற செலவுகள் ஏற்படுவதைத் தடுக்கும். ஏ.சி., பயன்படுத்தும் அறையில், இரும்பால் செய்யப்பட்ட பொருட்களைத் தவிர்ப்பது நல்லது. தண்ணீர் வடியும் குழாயை, சரியான முறையில் வடிகாலோடு இணைக்க வேண்டும்.
வடிகுழாய் மேலும், கீழுமாக இருந்தால், தண்ணீர் சரியாக வெளியேறாமல் மீண்டும் ஏ.சி.,க்கே வந்து, அறைக்குள் சொட்டும் வாய்ப்பு ஏற்படும். இவ்வாறு, கூறி முடித்தார் மெக்கானிக் அருள்குமார்.

