ADDED : மே 06, 2024 12:27 AM

மேட்டுப்பாளையம்:சிறுமுகை வனச்சரகத்திற்கு உட்பட்ட பெத்திகுட்டை பகுதியில் குட்டை ஒன்றில் யானை தஞ்சம் அடைந்தது.
மேட்டுப்பாளையம் அடுத்துள்ள சிறுமுகை அருகே பெத்திகுட்டை உள்ளது. பெத்திகுட்டை ஊரை ஒட்டி உள்ள வனப்பகுதியில் யானைகள் நடமாட்டம் உள்ளது. இதனிடையே நேற்று வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை காட்டு யானை, மேட்டுப்பாளையம்- - சத்தியமங்கலம் சாலையில் உள்ள குட்டையில் உள்ள தண்ணீரில் இறங்கி குளித்தது. 10 அடி வரை குட்டையில் தண்ணீர் உள்ளது. பின் அங்கேயே சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக யானை முகாமிட்டது. இதனை அப்பகுதி மக்கள் ஆர்வமுடன் வந்து வேடிக்கை பார்த்தனர்.
இதுகுறித்து சிறுமுகை வனத்துறையினர் கூறுகையில், வெயிலின் தாக்கத்தால் யானை குட்டையில் இறங்கி குளியல் போட்டு, வெப்பத்தை தணித்து கொண்டது. யானையை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம், என்றனர்.