/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'பார்' ஆக மாறிய அங்கன்வாடி கட்டடம் கிராம மக்கள் அதிருப்தி
/
'பார்' ஆக மாறிய அங்கன்வாடி கட்டடம் கிராம மக்கள் அதிருப்தி
'பார்' ஆக மாறிய அங்கன்வாடி கட்டடம் கிராம மக்கள் அதிருப்தி
'பார்' ஆக மாறிய அங்கன்வாடி கட்டடம் கிராம மக்கள் அதிருப்தி
ADDED : ஆக 20, 2024 02:13 AM

கிணத்துக்கடவு;கிணத்துக்கடவு, மணிகண்டபுரத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தை மது அருந்தும் 'பார்' போன்று மாற்றியுள்ளதால் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
கிணத்துக்கடவு, வடபுதுார் ஊராட்சிக்கு உட்பட்ட மணிகண்டபுரம் பகுதியில், அங்கன்வாடி மையம் உள்ளது. இந்த கட்டடத்தில் குழந்தைகள் படிப்பதில்லை. இதற்கு மாற்றாக, வேறு கட்டடம் கட்டப்பட்டு அங்கு அங்கன்வாடி மையம் செயல்படுகிறது.
தற்போது, இந்த கட்டடத்தில், குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவு பொருட்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. கட்டடத்தில் இருந்து, சில அங்கன்வாடி மையங்களுக்கு சத்துமாவு மற்றும் பிற பொருட்கள் எடுத்துச்செல்லப்படுகிறது.
இந்த கட்டடத்தின் அருகில், அரசு மதுபான டாஸ்மாக் கடை இருப்பதால், இரவு நேரத்தில் சமூக விரோதிகள் இந்த அங்கன்வாடி மைய கட்டட வளாகத்தில் அமர்ந்து, மது அருந்துகின்றனர்.
பின்னர், காலி மது பாட்டில் மற்றும் பிளாஸ்டிக் டம்ளர், புகையிலை பொருள் காலி பாக்கெட் போன்றவற்றை இந்த வளாகத்தில் வீசிச்செல்கின்றனர். இதனால், அருகில் உள்ள குடியிருப்பு பகுதி மக்கள் அவதிப்படுகின்றனர்.
மக்கள் கூறியதாவது:
இந்த கட்டடம், குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவு பொருட்கள் இருப்பு வைக்கவும், எடுப்பதற்கும் மட்டும் திறக்கப்படுகிறது. மற்ற நாட்களில் இந்த கட்டடம் பூட்டிய நிலையில் இருக்கும்.
இங்கு அமர்ந்து மது அருந்தும் சிலர், கட்டடத்தின் இரும்பு கதவை சேதப்படுத்தியுள்ளனர். மது அருந்தி விட்டு உறங்குவது போன்ற செயல்களில் ஈடுபடுவதால் மக்கள் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், அரசு கட்டடத்தில், சமூக விரோதிகள் அத்துமீறி நுழைந்து மது அருந்த பயன்படுத்துவதை தடுக்க இங்கு கண்காணிப்பு கேமரா அமைக்க வேண்டும்.
இவ்வாறு, கூறினர்.

