/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மலையேற போறீங்களா... டாக்டர் கிட்ட கேட்டுக்கோங்க! உயர்கிறது வெள்ளியங்கிரி மலையில் உயிர்ப்பலி
/
மலையேற போறீங்களா... டாக்டர் கிட்ட கேட்டுக்கோங்க! உயர்கிறது வெள்ளியங்கிரி மலையில் உயிர்ப்பலி
மலையேற போறீங்களா... டாக்டர் கிட்ட கேட்டுக்கோங்க! உயர்கிறது வெள்ளியங்கிரி மலையில் உயிர்ப்பலி
மலையேற போறீங்களா... டாக்டர் கிட்ட கேட்டுக்கோங்க! உயர்கிறது வெள்ளியங்கிரி மலையில் உயிர்ப்பலி
ADDED : ஏப் 01, 2024 01:26 AM

கோவை:மலையேற திட்டமிடுபவர்கள் முதலில், முறையான மருத்துவ ஆலோசனை பெறுவது பாதுகாப்பானது என, டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
தென்கயிலாயம் எனும், வெள்ளியங்கிரி மலை, மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில், கடல் மட்டத்திலிருந்து, 6,000 அடி உயரத்தில் அமைந்துள்ளது.
வெள்ளியங்கிரி மலை, அடிவாரம் பூண்டியிலிருந்து, ஐந்தரை கி.மீ., மலையேறி சென்றால், சிவபெருமானை தரிசிக்கலாம். இம்மலைக் கோவிலுக்கு செல்ல, ஏழு மலைகளை கடந்து நடந்தே செல்ல வேண்டும்.
இந்தாண்டு பிப்., முதல், மே வரை நான்கு மாதங்கள், வெள்ளியங்கிரிக்கு சென்று வர பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கடந்த, பிப்., 12 முதல் தற்போது வரை வெள்ளியங்கிரி மலைக்கு சென்ற, வேலுார் மாவட்டத்தை சேர்ந்த தமிழ்செல்வன், 24, கோவை மாவட்டத்தை சேர்ந்த கிரண், 22, ஆந்திர மாநிலத்தை சேர்ந்த சுப்பாராவ், 68, சேலம் மாவட்டத்தை சேர்ந்த தியாகராஜன், 35, தேனி மாவட்டத்தை சேர்ந்த பாண்டியன், 40, சென்னை முகப்பேரை சேர்ந்த ரகுராம், 50 ஆகிய ஆறு பேர் உயிரிழந்துள்ளனர்.
எந்த வித மருத்துவ ஆலோசனையும் இன்றி, மலையேறியதே உயிரிழப்புக்கு காரணம் என, தெரிவிக்கப்படுகிறது.
ஏழு மலை தாண்டி கோவிலுக்கு செல்ல வேண்டிய நிலையில்,ஐந்து மற்றும் ஆறாவது மலையில், குளிர் அதிகம் இருக்கும் என, வனத்துறையினர் தெரிவிக்கின்றனர்.
6,000 அடி உயரத்துக்கு செல்வதால், இருதய துடிப்பு அதிகரிப்பு, மூச்சுத்திணறல் ஆகிய பிரச்னைகள் ஏற்படலாம். இதன் காரணமாக உயிரிழப்பு ஏற்படுகிறது. இதைத்தவிர்க்க உரிய மருத்துவ ஆலோசனை பெற்ற பின்னரே மலையேற வேண்டும் என்கின்றனர் டாக்டர்கள்.
நுரையீரல் நோயியல் நிபுணர் வரூண் கூறியதாவது:
மலையேறுபவர்கள் முழு உடற்தகுதியுடன் இருக்க வேண்டும். முறையான பயிற்சி பெற வேண்டும். தினமும் உடல் உழைப்பு உள்ளவர்கள் மட்டுமே மலைகளில் ஏறலாம்.
ஆஸ்துமா, நுரையீரல் தொடர்பான நோய் உள்ளவர்கள், இருதய நோய்கள், இருதய துடிப்பு சீராக இல்லாதவர்கள், டாக்டரை ஆலோசிக்காமல் செல்வது சிக்கலை ஏற்படுத்தும்.
ஏதாவது பிரச்னை ஏற்பட்டால், உடனடி மருத்துவ உதவி கிடைப்பது சிரமம். மலையேறும்முன் டாக்டரிடம் கலந்தாலோசிக்க வேண்டும். உயரமான மலைக்கு செல்வதால், 'மவுன்டன் சிக்னஸ்' எனும், மூச்சுத்திணறல் அதிகரிப்பு, நெஞ்சுவலி ஏற்படும்.
கடினமாக மலை ஏறும் போது இருதயம், நுரையீரல் ஆகிய இரண்டும் அதிகமாக வேலை செய்ய வேண்டியிருக்கும். குளிர் அதிகம் இருக்கும் என்பதால், கடினமான குளிர் காற்று அதிகளவில் உள்ளிழுக்கப்படும்.
இதனால், மூச்சுக்குழாய் சுருக்கம் ஏற்பட்டு, மூச்சுத்திணறல் அதிகரிக்கும். 45 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் செல்லலாம். ஆனால், இதற்கு பிரத்யேக வயது வரம்பு இல்லை.
55 - 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் செல்வதை தவிர்க்கலாம், அல்லது டாக்டர் ஆலோசனைப்படி செல்லலாம்.
இவ்வாறு, அவர் கூறினார்.

