/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பள்ளிகளில் கலைத்திருவிழா; மாணவர்கள் அசத்தல்
/
பள்ளிகளில் கலைத்திருவிழா; மாணவர்கள் அசத்தல்
ADDED : செப் 10, 2024 02:25 AM

பொள்ளாச்சி அருகே, தொப்பம்பட்டி நடுநிலைப்பள்ளியில் கலைத்திருவிழா போட்டிகளில், மாணவர்கள் திறமையை வெளிப்படுத்தினர்.
பள்ளி கல்வித்துறை சார்பில், 2024--25ம் ஆண்டின் கல்வி சாரா செயல்பாடுகளில், பள்ளி அளவிலான கலைத்திருவிழா போட்டிகளாக நடத்தப்பட்டு மாணவர்களிடன் தனித்திறமை வெளிக்கொண்டு வரப்படுகிறது.
மாணவர்களிடையே சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் வளப்படுத்துதல் சார்ந்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்துடன், சூழல் பாதுகாப்பு அனைவரின் பொறுப்பு என்ற மையக்கருத்தின் அடிப்படையில் அனைத்துப் போட்டிகளும் நடைபெறுகிறது.
அதில், பொள்ளாச்சி அருகே தொப்பம்பட்டி நடுநிலைப்பள்ளியில், கலைத்திருவிழா போட்டிகள் நடைபெற்றன. தலைமையாசிரியர் கணேசன் தலைமை வகித்தார்.பிரிவு, ஒன்றில், ஒன்றாம் வகுப்பு, இரண்டாம் வகுப்புக்கும், பிரிவு இரண்டில், 3,4,5 வகுப்புகளுக்கும்; பிரிவு-, மூன்றில், 6,7,8 வகுப்புகள் என போட்டிகள் நடத்தப்பட்டன.
இதில், 1, 2 வகுப்புகளுக்கு ஒப்புவித்தல், கதை கூறுதல், வண்ணம் தீட்டுதல், மாறுவேடம், ஆங்கிலப் பாடல்கள் என ஐந்து போட்டிகளும், 3,4,5 வகுப்புகளுக்கு பேச்சு, திருக்குறள், மெல்லிசை, தேசபக்திப் பாடல்கள், களிமண் பொம்மைகள், மாறுவேடம், நாட்டுப்புற நடனம், பரத நாட்டியம் என எட்டு போட்டிகளும் நடைபெற்றன.
மேலும், 6,7,8ம் வகுப்புகளுக்கு ஓவியம், களிமண் சுதை வேலைப்பாடு, மணல் சிற்பம், செவ்வியல் இசை, வில்லுப்பாட்டு, நாட்டுப்புறப்பாடல், கிராமிய நடனம், பரத நாட்டியம், தனி நடிப்பு, நகைச்சுவை, பலகுரல் பேச்சு என 11 போட்டிகளும் நடைபெற்றன.
சிறப்பு கவனம் தேவைப்படும் மாணவர்களுக்கு ஓவியம், வண்ணம் தீட்டுதல், மாறுவேடம், களிமண் பொம்மைகள், களிமண் சுதை வேலைப்பாடுகள் மணல் சிற்பம் போன்ற போட்டிகள் நடைபெறுகிறது.
பள்ளி அளவிலான போட்டிகளில், முதல் மூன்று இடங்களைப் பெற்றவர்களின் பெயர்கள், 'எமிஸ்' இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டது. அவர்கள் போட்டிகளில் பங்கேற்ற வீடியோக்களும் பதிவேற்றம் செய்யப்பட்டன.
இந்த வீடியோக்களை குறுவள மைய அளவிலும், வட்டார அளவிலும் பார்வையிட்டு, பரிசு பெறும் வகையில் மாணவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். பள்ளி ஆசிரியர்கள் மகாலட்சுமி, தேவி, மணிவேல், உஷா, மனுவேல்ராஜன் ஆகியோர் போட்டிகளை நடத்தினர்.
உடுமலை
மாணவர்களின் கலைத்திறன்களை வெளிப்படுத்துவதற்கு, பள்ளிகளில் கலைத்திருவிழா நடக்கிறது. இதில், மாநில அளவில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு கலையரசன், கலையரசி விருதுகளும் வழங்கப்படுகிறது.
முதற்கட்டமாக, தற்போது பள்ளி கலைத்திருவிழா போட்டிகள் நடக்கிறது. ஆண்டியகவுண்டனுார் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் நடந்த போட்டியில் மாணவர்கள் தங்களின் திறன்களை வெளிப்படுத்தினர்.
களிமண் உருவங்களை செய்வது, ஓவியங்கள் வரைதல், மாறுவேடப்போட்டி, பேச்சு, தனி நடனம், குழு நடனம், உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகளில், ஒவ்வொரு மாணவரும் தங்களின் தனித்திறன்களை காட்டினர்.
பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் பள்ளி தலைமையாசிரியர் தங்கவேல், வட்டார கல்வி அலுவலர் ஆறுமுகம் பங்கேற்பு மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினர்.
ஆசிரியர் கல்பனா, ஆசிரியர் பயிற்றுனர் சங்கீதா நிகழ்ச்சிகளை தொகுத்து பதிவேற்றம் செய்தனர். நிகழ்ச்சியில் பள்ளி மேலாண்மை குழுவினர், பெற்றோர் பங்கேற்றனர்.