/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவை அரசு மருத்துவமனை சந்திப்பில்... அருகில் ஆஸ்பத்திரி இருக்கும் தைரியம்!வாகன போக்குவரத்து 'குண்டக்க மண்டக்க'டிராபிக் போலீஸ் பிரிவு என ஒன்று இருக்கிறதா?
/
கோவை அரசு மருத்துவமனை சந்திப்பில்... அருகில் ஆஸ்பத்திரி இருக்கும் தைரியம்!வாகன போக்குவரத்து 'குண்டக்க மண்டக்க'டிராபிக் போலீஸ் பிரிவு என ஒன்று இருக்கிறதா?
கோவை அரசு மருத்துவமனை சந்திப்பில்... அருகில் ஆஸ்பத்திரி இருக்கும் தைரியம்!வாகன போக்குவரத்து 'குண்டக்க மண்டக்க'டிராபிக் போலீஸ் பிரிவு என ஒன்று இருக்கிறதா?
கோவை அரசு மருத்துவமனை சந்திப்பில்... அருகில் ஆஸ்பத்திரி இருக்கும் தைரியம்!வாகன போக்குவரத்து 'குண்டக்க மண்டக்க'டிராபிக் போலீஸ் பிரிவு என ஒன்று இருக்கிறதா?
ADDED : ஆக 21, 2024 12:05 AM

கோவை;கோவை மாநகர காவல்துறையில், போக்குவரத்து போலீஸ் பிரிவு என ஒன்று இருக்கிறதா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தும் வகையில் இருக்கிறது, அரசு மருத்துவமனை முன் நிலவும் கட்டுப்பாடில்லாத, தாறுமாறான வாகன போக்குவரத்து.
கோவை அரசு மருத்துவமனைக்கு, 24 மணி நேரமும் மக்கள் அதிகளவில் வந்து செல்கின்றனர். நோயாளிகள் மற்றும் நோயாளிகளை பார்க்க வருபவர்களின் வாகனங்களை, உள்ளே செல்ல தடை விதித்துள்ளது, மருத்துவமனை நிர்வாகம்.
இதனால் அரசு மருத்துவமனைக்கு வருபவர்கள், தங்களது இரு சக்கர வாகனங்களை மருத்துவமனை முன் தாறுமாறாக நிறுத்திவிட்டு, உள்ளே சென்று விடுகின்றனர். அங்கு இடம் கிடைக்காதவர்கள், மருத்துவமனைக்கு எதிரே உள்ள பஸ் நிறுத்தத்தில் நிறுத்திச் சென்று விடுகின்றனர்.
ஆம்புலன்சுக்கு வழியில்லை
இதனால் பஸ் நிறுத்தம், இரு சக்கர வாகன நிறுத்தமாகவே மாறி விட்டது. ரயில்வே ஸ்டேஷன், டவுன்ஹால் பகுதிகளில் இருந்து வரும் பஸ்கள், அரசு மருத்துவமனை முன் வளைந்து திருப்புவது, பெரும் சவாலாக மாறியுள்ளது. மருத்துவமனை முன் குறுக்கும் நெடுக்குமாக, சாலையை கடப்பவர்கள், அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனர்.
மருத்துவமனை முன் உள்ள சாலை, குறுகலாக இருப்பதால் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிக்கின்றன. இதனால் அவசரமாக வரும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் கூட, மருத்துவமனைக்குள் நுழைய முடியாத நிலை ஏற்படுகிறது. இதே நிலைதான் டாக்டர்களின் வாகனங்களுக்கும்.
அலட்சியப்போக்கு
இப்பிரச்னைக்கு இணைந்து தீர்வு காண வேண்டிய மருத்துவமனை நிர்வாகம், 'எங்கேயோ மழை பெய்கிறது; நாம் ஏன் குடை பிடிக்க வேண்டும்' என்ற நினைப்பில் இருக்கிறது.
மாநகர போக்குவரத்து போலீசோ, போனால் போகட்டும் என, சமீபகாலமாகத்தான் ஒரு டிராபிக் போலீசை, மருத்துவமனை முன் பணியமர்த்தி இருக்கிறது.
இந்த சந்திப்பில் நிரந்தரமாக ஒரு போக்குவரத்து குடை அமைத்து, வாகனங்களை ஒழுங்குபடுத்த வேண்டும் என்ற எண்ணம், ஏன் இன்னும் உதிக்கவில்லை என்பது புரியாத புதிராக உள்ளது.
இதுகுறித்து, பொதுமக்கள் கூறியதாவது:
கோவை அரசு மருத்துவமனையின் முன், தாறுமாறாக வாகனங்களை நிறுத்திச்சென்று விடுவதால், போக்குவரத்து பாதிப்பு நிரந்தரமாகி விட்டது. மருத்துவமனைக்குள் செல்ல சிரமமாக உள்ளது.ரோட்டோரம் நிறுத்தப்படும் இரு சக்கர வாகனங்கள், திருட்டுப்போய் விடுகின்றன. போலீசாரும் சில நேரங்களில் அபராதம் விதிக்கின்றனர். எனவே மருத்துவமனைக்கு வரும் வாகனங்களை, மருத்துவமனை வளாகத்தில் நிறுத்த இடம் ஒதுக்க வேண்டும்.
திருட்டை தடுக்க டோக்கன் முறையை அமல்படுத்த வேண்டும் அல்லது மாநகராட்சி பார்க்கிங் வசதியை ஏற்படுத்தித் தர வேண்டும். இதனால் சாலையில் வாகன நெரிசலை தவிர்க்கலாம். அவசரமாக வரும் ஆம்புலன்ஸ், மருத்துவமனைக்குள் எளிதாக நுழைய முடியும். பாதசாரிகள் சாலையை கடக்க, தனி பாதை ஏற்படுத்த வேண்டும்.
முக்கியமாக, மருத்துவமனை நுழைவாயில் அருகே உள்ள பஸ் நிறுத்தத்தை அப்புறப்படுத்த வேண்டும். அடுத்தடுத்து ரயில்வே ஸ்டேஷன், மருத்துவமனை, பள்ளிகள் இருப்பதால், ஒருமுறை டிராபிக் ஜாம் ஏற்பட்டால், 2 கி.மீ., துாரத்திற்கு, போக்குவரத்து ஸ்தம்பித்து விடுகிறது.
மருத்துவமனை நிர்வாகம், மாநகராட்சி நிர்வாகம் மற்றும் மாநகர போக்குவரத்து போலீசார் இணைந்து, இந்த முக்கிய பிரச்னைக்கு, உடனடியாக தீர்வு காண வேண்டும்.
இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.