/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மழையில் நிரம்பும் அத்திக்கடவு திட்ட குளம், குட்டைகள்!
/
மழையில் நிரம்பும் அத்திக்கடவு திட்ட குளம், குட்டைகள்!
மழையில் நிரம்பும் அத்திக்கடவு திட்ட குளம், குட்டைகள்!
மழையில் நிரம்பும் அத்திக்கடவு திட்ட குளம், குட்டைகள்!
UPDATED : மே 26, 2024 06:15 AM
ADDED : மே 26, 2024 06:14 AM

திருப்பூர்: அத்திக்கடவு - அவிநாசி நீர்செறிவூட்டும் திட்டம் பயன்பாட்டுக்கு வருவதில் தாமதம் ஏற்பட்டு வரும் நிலையில், கோடை மழையால், திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட குளம், குட்டைகள் நிரம்பி வருகின்றன; இது, திட்டம் சார்ந்த பகுதிகளில் உள்ள விவசாயிகள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
பவானி ஆற்றுநீரை மையமாக வைத்து, திருப்பூர், கோவை, ஈரோடு மாவட்டங்களில் உள்ள, 1,045 குளம், குட்டைகளில் நீர் செறிவூட்டும் வகையில், 1,756 கோடி ரூபாயில் வடிவமைக்கப்பட்டுள்ள அத்திக்கடவு - அவிநாசி நீர் செறிவூட்டும் திட்டப்பணி, நீர் வளத்துறையினரின் மேற்பார்வையில், 'எல் அண்ட் டி' நிறுவனத்தினரால் நிறைவு செய்யப்பட்டுள்ளது.
இதற்கென, 1,046 கி.மீ., துாரத்துக்கு குழாய் பதிக்கப்பட்டுள்ளது. ஆறு நீரேற்ற நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்ந்தெடுக்கப்பட்ட குளம், குட்டைகளில் செறிவூட்டப்படும் நீரின் அளவை அறிய, 'சென்சார்' உபகரணங்கள் பொருத்தப்பட்டன. 'கடந்தாண்டு, செப்., மாதமே திட்டம் செயல்பாட்டுக்கு வரும்' எனக் கூறப்பட்ட நிலையில், திட்டத்துக்கென குழாய் பதிக்க நிலம் வழங்கிய விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குவதில் சிக்கல்; வறட்சியால் பவானி ஆற்றில் நீர் இல்லாததது போன்ற காரணங்களால், திட்டம் செயல்பாடுக்கு வருவதில் இழுபறி நீடிக்கிறது.
இதற்கிடையில், வெள்ளோட்ட அடிப்படையில் குளம், குட்டைகளில் நீர் செறிவூட்டப்பட்டது. இது, திட்டம் சார்ந்த பகுதிகளில் உள்ள விவசாயிகள் மத்தியில், எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
![]() |
திருப்பூர், ஈரோடு, கோவை மாவட்ட குளம், குட்டைகளுக்கு நீர் நிரப்பும் இயக்கத்தின் செயலாளர் பெரியசாமி கூறியதாவது:அத்திக்கடவு திட்டம் என்பது, கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்ட மக்களின், 60 ஆண்டு கடந்த கோரிக்கை. ஆண்டுக்கு, 1.50 டி.எம்.சி., நீரில், 1,045 குளம், குட்டைகளை நீர் செறிவூட்டும் திட்டம். திட்டப்பணி நிறைவு பெற்றும் பயன்பாட்டுக்கு வருவதில் இழுபறி நீடிக்கிறது.
கோடை மழையால் அத்திக்கடவு திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட குளம், குட்டைகளில் நீர் நிரம்ப துவங்கியிருக்கிறது; சில குளம், குட்டைகளில் நீர் நிரம்பி வழிகின்றன. அத்திக்கடவு திட்டம் வந்தால், குளம், குட்டைகள் நீர் நிரம்பி எப்படி தோற்றமளிக்குமோ, அதுமாதிரியான தோற்றத்தை தற்போது பார்க்க முடிகிறது.
கோடையின் போது, போர்வெல் வாயிலாக நிலத்தடி நீரை மக்கள் பயன்படுத்துகின்றனர். திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில், ஆயிரம் அடி ஆழத்துக்கும் போர்வெல் தோண்ட வேண்டியுள்ளது; அவ்வப்போது பெய்யும் பருவமழை, அத்திக்கடவு அவிநாசி நீர் செறிவூட்டும் திட்டம் போன்றவற்றால், குளம், குட்டைகள் ஆண்டு முழுக்க நிரம்பியிருக்க வாய்ப்புண்டு; இதனால், நிலத்தடி நீர்மட்டம் உயரும்; மண் வளம்; நில வளம் மேம்படும்.
இவ்வாறு, அவர் கூறினார்.