/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பவானி ஆற்றில் தொழிற்சாலைகளுக்கு தண்ணீர் எடுக்க தடை
/
பவானி ஆற்றில் தொழிற்சாலைகளுக்கு தண்ணீர் எடுக்க தடை
பவானி ஆற்றில் தொழிற்சாலைகளுக்கு தண்ணீர் எடுக்க தடை
பவானி ஆற்றில் தொழிற்சாலைகளுக்கு தண்ணீர் எடுக்க தடை
ADDED : மே 04, 2024 12:51 AM

கோவை : பவானி ஆற்றில் இருந்து தொழிற்சாலைகள் பயன்பாட்டுக்கு தண்ணீர் எடுக்க தடை விதித்து, கோவை கலெக்டர் கிராந்திகுமார் உத்தரவிட்டுள்ளார். இதை கண்காணிக்க, வருவாய்த்துறை அலுவலர்கள் கொண்ட குழு அமைத்திருக்கிறார்.
கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில், கோவை மாநகராட்சி, திருப்பூர் மாநகராட்சி மற்றும் இரு மாவட்டங்களுக்கு உட்பட்ட நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிகளில்செயல்படுத்தப்படும், 14 திட்டங்களுக்கு குடிநீர் வழங்கும் முக்கியமான ஆதாரமான பவானி ஆறு மற்றும் பில்லுார் அணைகளுக்கு போதிய தண்ணீர் வரத்தில்லை.
நீர் இருப்பு தீர்ந்தது
இவைகளுக்கான நீர்ப்பிடிப்பு அணைகளான அப்பர் பவானி, அவலாஞ்சி மற்றும் எமரால்டு அணைகளில், கடந்தாண்டு மழைப்பொழிவு குறைவாக இருந்ததால், தற்போது போதிய நீர் இருப்பு இல்லை. இங்கிருந்து தேவையான அளவு குடிநீர் எடுக்க முடியாததால், சப்ளையில் தாமதம் ஏற்பட்டது.
கடந்த ஏப்.,வரை பில்லுார் அணைக்கு மேல்பகுதியில் உள்ள அணைகளில் உள்ள பயன்பாட்டு நீரை பயன்படுத்தி, மின்னுற்பத்தி செய்து, பில்லுார் அணைக்கு தருவிக்கப்பட்டு, குடிநீர் சேகரித்து வழங்கப்பட்டது.
பயன்பாட்டு நீர் முழுவதையும் பயன்படுத்தியதால், பில்லுார் இரண்டாவது திட்டத்துக்கு தேவையானகுடிநீர் சேகரிக்க முடியாத நிலை ஏற்பட்டது.பில்லுார் அணை நீர் மட்டம் குறைந்த காரணத்தால், பில்லுார் - 1, 2 ஆகிய திட்டங்களுக்கு குடிநீர் 'பம்பிங்' செய்யவும், எடுக்கவும் முடியவில்லை.
பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கும் பணியில் மிகவும் தொய்வு ஏற்பட்டதாலும், கால இடைவெளி அதிகமானதாலும் மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அதாவது, நீலகிரி மாவட்டம் அவலாஞ்சி அணைக்கு மேல்பகுதியில் உள்ள போத்திமந்து நீர்த்தேக்கத்தில் மூன்று மோட்டார்கள் நிறுவப்பட்டு, அங்குள்ள இருப்பு நீர், 283.20 கோடி லிட்டர் (100 மில்லியன் கனஅடி) படிப்படியாக 'பம்ப்' செய்யப்பட்டு, அவலாஞ்சி வழியாக, பில்லுார் அணைக்கு நாளொன்றுக்கு, 19 கோடியே, 82 லட்சத்து, 40 ஆயிரம் லிட்டர் (7 மில்லியன் கனஅடி) தண்ணீர் கொண்டு வரப்பட்டு, குடிநீர் பயன்பாட்டுக்கு வழங்கப்படுகிறது.
இதுவும் போதுமானதாக இல்லாததால், அப்பர் பவானி அணையில் இருப்பு நீர், 991.20 கோடி லிட்டரை (350 மில்லியன் கனஅடி), மதகு வழியாக திறந்து, பவானி ஆறு வழியாக, பில்லுார் அணைக்கு கொண்டு வரப்படுகிறது. இதை பயன்படுத்தி, 'பம்பிங்' பணி ஆரம்பிக்கப்பட்டு, அனைத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கும், குடிநீர் வினியோகிக்கப்படுகிறது.
போத்திமந்து அணையில் இருந்து, 283.20 கோடி லிட்டர், அப்பர் பவானி அணையில் இருந்து, 991.20 கோடி லிட்டர் தணணீர் வந்து சேரும்.
கலெக்டர் அவசர ஆலோசனை
இவ்வாறு தருவிக்கப்படும் தண்ணீரை சிக்கனமாக, ஜூன் 15 வரை உபயோகிக்க கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்த அவசர ஆலோசனை கூட்டம், கோவை கலெக்டர் அலுவலகத்தில், கலெக்டர் கிராந்திகுமார் தலைமையில் நேற்று நடந்தது.
கூட்டத்தின் முடிவில் மாவட்ட நிர்வாகம் விடுத்துள்ள அறிவிப்பு:
பவானி ஆற்றில் விவசாய பயன்பாட்டுக்கு எடுக்கும் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். நிலைமை சீரடையும் வரை தொழிற்சாலைகள் பயன்பாட்டுக்கு தண்ணீர் எடுப்பதைநிறுத்திக் கொள்ள வேண்டும்.
இதை கண்காணிக்க, வருவாய்த்துறை அலுவலர்கள் கொண்ட குழு அமைக்கப்படுகிறது.
14 குடிநீர் திட்டங்களுக்கு எடுக்கப்படும் குடிநீர் அளவை கண்காணிக்கவும், சிக்கனமாக பயன்படுத்துவதை கண்காணிக்கவும், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி அலுவலர்களை கொண்டு கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் பயன்பாட்டுக்கு ஏற்கனவே உள்ள போர்வெல்களில், பழுது ஏற்பட்டால் உடனடியாக சரி செய்ய வேண்டும்.
குடிநீரை பொதுமக்கள் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். மற்ற பயன்பாட்டுக்கு நிலத்தடிநீரை பயன்படுத்த வேண்டும்.
இவ்வாறு, மாவட்ட நிர்வாகம் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.