/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'பலத்த காற்றில் இருந்து வாழை மரங்களை காக்கலாம்'
/
'பலத்த காற்றில் இருந்து வாழை மரங்களை காக்கலாம்'
ADDED : மே 21, 2024 11:14 PM
பெ.நா.பாளையம்;பலத்த காற்று வீசும் போது, வாழை மரங்களை எவ்வாறு காப்பது என, பெரியநாயக்கன்பாளையம் தோட்டக்கலை துறை, வாழை விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கி உள்ளது.
பெரியநாயக்கன்பாளையம் வட்டாரத்தில் ஆண்டுதோறும், 766 ஏக்கர் பரப்பளவில் வாழை சாகுபடி செய்யப்படுகிறது. அதிக காற்று மற்றும் மழை காரணமாக வாழை மரங்கள் சேதமாவது ஆண்டுதோறும் நடந்து வருகிறது.
சில நாட்களுக்கு முன்பு கூடலுார் நகராட்சிக்கு உட்பட்ட செல்வபுரம் பகுதியில், கந்தசாமி தோட்டத்தில் பலத்த காற்று வீசியதில், 1800க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் முறிந்து விழுந்து சேதமானது.
வாழை மரங்களை எவ்வாறு பாதுகாப்பது என்பது குறித்து பெரியநாயக்கன்பாளையம் தோட்டக்கலை துறையினர் கூறுகையில், 'ஆண்டுதோறும் வாழை சாகுபடி செய்யும் விவசாயிகள், தங்கள் தோட்டங்களில் வயலை சுற்றி சவுக்கு, மகாகனி மரங்களை வரப்பு ஓரங்களில் நடவு செய்து, காற்றின் பாதிப்பிலிருந்து வாழை மரங்களை பாதுகாக்க முடியும்.
மேலும், காற்றின் வேகம் அதிகம் உள்ள இடங்களில், வாழை மரங்களை சுற்றி மண் அணைக்க வேண்டும். சவுக்கு போன்ற குச்சிகளை கயிறுகள் மூலம் கட்டி, முட்டுக் கொடுக்க வேண்டும். மழை நீர் நேரடியாக வாழைக் காய்களில் படாமல் இருக்க, வாழைத்தார்களை உறைகளைக் கொண்டு மூட வேண்டும்.
80 முதல், 90 சதவீதம் முதிர்ந்த காய்களை அறுவடை செய்ய வேண்டும். காற்றின் பாதிப்பு ஏற்படும் பகுதிகளில், வாழை மரங்களின் கீழ்மட்ட இலைகளை அகற்றி, மரத்தின் அடியில் மண் அணைக்க வேண்டும். வாழை மரங்களை சுற்றி மழை நீர் தேங்காமல் இருக்க, வடிகால் வசதி செய்து, வாழை மரங்களை பாதுகாக்கலாம' என்றனர்.

