/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
180 நாளுக்கு மேலான பீர்களை கடையில் வைத்திருக்கக்கூடாது! டாஸ்மாக் ஊழியர்களுக்கு நிர்வாகம் அறிவுறுத்தல்
/
180 நாளுக்கு மேலான பீர்களை கடையில் வைத்திருக்கக்கூடாது! டாஸ்மாக் ஊழியர்களுக்கு நிர்வாகம் அறிவுறுத்தல்
180 நாளுக்கு மேலான பீர்களை கடையில் வைத்திருக்கக்கூடாது! டாஸ்மாக் ஊழியர்களுக்கு நிர்வாகம் அறிவுறுத்தல்
180 நாளுக்கு மேலான பீர்களை கடையில் வைத்திருக்கக்கூடாது! டாஸ்மாக் ஊழியர்களுக்கு நிர்வாகம் அறிவுறுத்தல்
UPDATED : ஜூலை 06, 2024 06:29 AM
ADDED : ஜூலை 06, 2024 12:24 AM

கள்ளச்சாராய உயிரிழப்புகள் காரணமாக, பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் டாஸ்மாக் நிர்வாகம், கடைகளில் 180 நாட்களுக்கு மேலான பீர்களை வைத்திருக்கக் கூடாது என்று, மதுக்கடை ஊழியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
பள்ளிக்கூடம், திருமண மண்டபங்களில் தீ விபத்து ஏற்பட்டு, பலர் உயிரிழந்த பின்பே, அந்த கட்டடங்களை ஆய்வு செய்வதற்கு, அரசு அக்கறை காட்டுகிறது.
மழை வெள்ளத்தால் மக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளான பின்பே, நீர் நிலை ஆக்கிரமிப்புகளின் மீது அரசின் கவனம் திரும்புகிறது. பள்ளி வாகனங்களில் குழந்தை இறந்தபின்பே, அந்த வாகனங்கள் ஆய்வு செய்யப்படுகின்றன.
இப்படி ஏதாவது உயிரிழப்பு அல்லது கடும் பாதிப்பு ஏற்பட்ட பின்பே, அதற்கான காரணிகளைக் கண்டறிவது அரசுக்கு வாடிக்கையாகிவிட்டது.
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குறித்து, மக்கள் பிரதிநிதிகள், ஊடகங்கள் சுட்டிக்காட்டிய பின்பும் அதைத் தடுக்காமல் இருந்த தமிழக அரசு, 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த பின்பே, அதற்கான காரணிகளைக் களைவதற்கு முயல்கிறது.
இதன் ஒரு பகுதியாக, தமிழகம் முழுவதும் கள்ளச்சாராயம் மற்றும் போலி மது விற்பனை நடக்கிறதா என்பதை அறிவதற்காக, டாஸ்மாக் கடைகளில் விற்பனை சரிந்துள்ளதா என்று கணக்கெடுப்பு நடத்தியது.
அடுத்தகட்டமாக, மதுக்கடைகளில் காலாவதியான சரக்குகளை விற்க வேண்டாமென்று, டாஸ்மாக் நிர்வாகம் அனைத்துக் கடை மேற்பார்வையாளர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
அதில், 'காலாவதியான மதுபானம் மற்றும் டின் பீர் உட்பட பீர் வகைகள் எதையும், எக்காரணத்தை முன்னிட்டும் வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்யக்கூடாது; முதலில் வந்ததை முதலில் விற்க வேண்டும்' என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
காலாவதியான பீர் என்பதற்கு, '180 நாட்களுக்கு மேலான' என்ற விளக்கமும் அளித்து, அவற்றை கடைகளில் இருப்பு வைத்திருக்கக்கூடாது என்றும், அறிவுரை கூறப்பட்டுள்ளது.
அதே போல, வண்டல் படிந்த மதுபான வகைகளையும் இருப்பில் வைத்திருக்கக்கூடாது; ஒவ்வொரு நாளும், அடுத்த 15 லிருந்து 30 நாட்களுக்குள் காலாவதியாகும் பீர் வகைகளைக் கணக்கெடுத்து, அதுபற்றி டாஸ்மாக் ஆபீசுக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும். பீர் மற்றும் வண்டல் படிந்த மதுபானங்கள் இருந்தால், காலாவதியாகும் தேதியிலேயே ஒப்படைக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
-நமது நிருபர்-