/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவையில் ஆங்காங்கே மீண்டும் முளைக்கின்றன விளம்பர பலகைகள்; கண்டுகொள்ளாமல் மாநகராட்சி நகரமைப்பு பிரிவினர் உறக்கம்
/
கோவையில் ஆங்காங்கே மீண்டும் முளைக்கின்றன விளம்பர பலகைகள்; கண்டுகொள்ளாமல் மாநகராட்சி நகரமைப்பு பிரிவினர் உறக்கம்
கோவையில் ஆங்காங்கே மீண்டும் முளைக்கின்றன விளம்பர பலகைகள்; கண்டுகொள்ளாமல் மாநகராட்சி நகரமைப்பு பிரிவினர் உறக்கம்
கோவையில் ஆங்காங்கே மீண்டும் முளைக்கின்றன விளம்பர பலகைகள்; கண்டுகொள்ளாமல் மாநகராட்சி நகரமைப்பு பிரிவினர் உறக்கம்
ADDED : ஆக 04, 2024 11:06 PM

கோவை : கோவை நகர் பகுதியில் அனுமதியற்ற விளம்பர பலகைகள் மீண்டும் ஆங்காங்கே அமைக்கப்பட்டு வருகின்றன. மாநகராட்சி நகரமைப்பு பிரிவினர், எதையும் கண்டுகொள்ளாமல் உள்ளதால், வாகனங்களில் பயணிப்போரின் கவனம் திசை மாறி, விபத்து ஏற்பட காரணமாகிறது.
கோவையில் அனுமதியின்றி வைக்கப்படும் விளம்பர பலகைகளை மாநகராட்சி நகரமைப்பு பிரிவினர் மற்றும் நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளை சேர்ந்த அலுவலர்கள் அகற்றி வருகின்றனர். இரும்பு சட்டங்களை அகற்றாமல் விடுவதால், அதிகாரிகளின் கண்காணிப்பு குறைந்ததும் மீண்டும் விளம்பர பலகைகள் வைக்கப்படுகின்றன.
சில வாரங்களுக்கு முன், செல்வபுரம் பகுதியில் இருந்த விளம்பர பலகைகள் மாநகராட்சி அதிகாரிகளால் அகற்றப்பட்டன. அப்போது, இரும்பு சட்டங்களை அகற்ற தனி டீம் அமைக்கப்படும் என நகரமைப்பு பிரிவினர் உறுதி கூறியிருந்தனர்.
அவ்வாறு அகற்றாமல் விட்டதால், தற்போது மூன்று இடங்களில் விளம்பர பலகைகள் மீண்டும் வைக்கப்பட்டுள்ளன.
அவிநாசி ரோட்டில் ஹோப் காலேஜ் பகுதியில், சிங்காநல்லுார் செல்லும் ரோட்டில் மகளிர் விடுதியின் பக்கவாட்டுச் சுவரில் மீண்டும் மீண்டும் விளம்பர பலகை வைக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன் பல முறை, இதே இடத்தில் விளம்பர பலகைகள் வைக்கப்பட்டு, அகற்றப்பட்டன. தற்போது மீண்டும் விளம்பர பலகை வைக்கப்பட்டிருக்கிறது. கோல்டுவின்ஸ் பகுதியில், மாநகராட்சி எல்லையை ஒட்டிய கட்டடத்தின் உச்சியில், ஒரு விளம்பர பலகை வைக்கப்பட்டிருக்கிறது.
இதேபோல், கவுண்டம்பாளையம், கணபதி, டெக்ஸ்டூல் பாலம் மற்றும் காந்திபுரம் பாலம் (ஆம்னி பஸ் ஸ்டாண்ட் அருகே), கவுலி பிரவுன் ரோடு, காமராஜபுரம் ஆகிய இடங்களில் அனுமதியற்ற விளம்பர பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.
மாநகராட்சி நகரமைப்பு பிரிவினர் கடுமையான நடவடிக்கை எடுக்காத ஒரே காரணத்தால், மீண்டும் மீண்டும் ஒரே இடத்தில் விளம்பர பலகைகள் வைக்கப்படுகின்றன.
கட்டட உரிமையாளர்களுக்கு அபராதம் விதிப்பது, இரும்பு சட்டங்களை உடனடியாக அறுத்தெடுப்பது உள்ளிட்ட நடவடிக்கை எடுத்தால் மட்டுமே, இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும்.