/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
உள்ளூர் தொழில்களை மேம்படுத்துங்க! முதல்வருக்கு எம்.எல்.ஏ., கோரிக்கை
/
உள்ளூர் தொழில்களை மேம்படுத்துங்க! முதல்வருக்கு எம்.எல்.ஏ., கோரிக்கை
உள்ளூர் தொழில்களை மேம்படுத்துங்க! முதல்வருக்கு எம்.எல்.ஏ., கோரிக்கை
உள்ளூர் தொழில்களை மேம்படுத்துங்க! முதல்வருக்கு எம்.எல்.ஏ., கோரிக்கை
ADDED : ஆக 28, 2024 11:47 PM
பொள்ளாச்சி : ''பல்வேறு பிரச்னைகளால் முடங்கியுள்ள உள்ளூர் சிறு, குறு தொழில்களை மேம்படுத்த முதல்வர் அக்கறை காட்ட வேண்டும்,'' என, எம்.எல்.ஏ., பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்தார்.
கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே முள்ளுப்பாடியில், எம்.எல்.ஏ., தொகுதி நிதியில் கட்டப்பட்ட நிழற்கூரையை பயன்பாட்டிற்கு அர்ப்பணித்த, எம்.எல்.ஏ., பொள்ளாச்சி ஜெயராமன், நிருபர்களிடம் கூறியதாவது:
தமிழக முதல்வர் ஸ்டாலின், தொழில்வளத்தை பெருக்க அமெரிக்கா சுற்றுப்பயணம் செல்கிறார். ஆனால், தமிழகத்தில் சிறு, குறு தொழில்கள் எல்லாம், வரி மற்றும் மின்கட்டண உயர்வு போன்ற பல்வேறு பிரச்னைகளால் முடங்கியுள்ளன.
இதனால், சொந்த ஊரில் சம்பாதித்து வந்த மக்கள், வேலை இழந்து சம்பளமின்றி தவிக்கின்றனர். இது எல்லாம் தமிழக முதல்வருக்கு தெரியுமா என்பது சந்தேகம் தான்.
உள்ளூரில் நேரடியாக சென்று, சிறு, குறு தொழில்முனைவோர்களை முதல்வர் சந்தித்து குறைகளை கேட்டறிந்து அதற்கு தீர்வு காண வேண்டும். மக்களுக்கு வேலை வாய்ப்பினை உறுதி செய்திட வேண்டும்.
தேர்தல் நேரத்தில் விவசாயிகளுக்கு கொடுக்கப்பட்ட எந்த வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படவில்லை. லோக்சபா தேர்தலின் போது, திருப்பூரில் தென்னை நார் உற்பத்தியாளர்களை சந்தித்து மின்கட்டண சலுகை தருவதாக தெரிவித்தார். ஆனால், அதை செய்யவில்லை.
கைத்தறி நெசவாளர்கள், கைத்தறிகளை ஓரமாக வைத்து விட்டு மாற்று வேலைக்கு செல்லும் நிலை உள்ளது. அமெரிக்கா சென்று விட்டு வந்த பிறகாவது, உள்ளூர் தொழில்களில் உள்ள பிரச்னைகளை தீர்க்க அக்கறை காட்ட வேண்டும்.
தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் தினமும் வித்தியாசமாக கொலைகள் நடக்கின்றன. முதல்வர் தான், போலீஸ் துறை அமைச்சர் என்பதையே மறந்து விட்டார். பாதுகாப்பு இல்லாத சூழலில் அச்சத்துடன் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இதற்கெல்லாம், தீர்வு காண ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும்.
இவ்வாறு, அவர் கூறினார்.

