/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
லஞ்சத்தால பாலம் வேலையில் காணோம் குவாலிட்டி; கூட்டம் நடத்தாமலே கணக்கு காட்டுது யுனிவர்சிட்டி!
/
லஞ்சத்தால பாலம் வேலையில் காணோம் குவாலிட்டி; கூட்டம் நடத்தாமலே கணக்கு காட்டுது யுனிவர்சிட்டி!
லஞ்சத்தால பாலம் வேலையில் காணோம் குவாலிட்டி; கூட்டம் நடத்தாமலே கணக்கு காட்டுது யுனிவர்சிட்டி!
லஞ்சத்தால பாலம் வேலையில் காணோம் குவாலிட்டி; கூட்டம் நடத்தாமலே கணக்கு காட்டுது யுனிவர்சிட்டி!
UPDATED : ஜூன் 04, 2024 07:06 AM
ADDED : ஜூன் 04, 2024 01:14 AM

வீட்டு வராண்டாவில் அமர்ந்து, நாளிதழ்களை புரட்டிக் கொண்டிருந்தாள் சித்ரா.
மார்க்கெட்டுக்குச் சென்று திரும்பிய மித்ரா, ''என்னக்கா, லோக்சபா எலக்சன் ரிசல்ட் எப்படி இருக்குமாம்,'' என, வீட்டுக்குள் நுழையும்போதே கொக்கி போட்டாள்.
''பா.ஜ., தி.மு.க., - அ.தி.மு.க.,ன்னு மூன்று முக்கிய கட்சிக்காரங்களும் நம்பிக்கையோட இருக்காங்க. பல்லடத்திலும், கவுண்டம்பாளையத்திலும் அதிகமான ஓட்டு பதிவாகி இருக்கறதுனால, ரத்தத்தின் ரத்தங்கள் உற்சாகமா இருக்காங்க; சிங்காநல்லுார்ல ஜாதி ஓட்டு, 'அலேக்'கா இலைக்கட்சிக்கு தான் விழுந்திருக்கும்னு சொல்றாங்க.
அதனால, இலைக்கட்சி வேட்பாளர், விதவிதமா 'போட்டோ ஷூட்' எடுத்து, பத்திரிகை துறை நண்பர்களுக்கு அனுப்பியிருக்காரு. இந்த போட்டோக்களை, சென்னை தலைமை அலுவலகங்களுக்கு அனுப்பி, ஓட்டு எண்ணுற அன்னைக்கு பயன்படுத்துங்கன்னு, நிருபர்களுக்கு அன்பான வேண்டுகோள் விடுத்திருக்காரு,''
கொட்டிய கரன்சி மழை
''தி.மு.க., சைடுல கரன்சி மழை பொழிஞ்சிருக்கறதுனால, கண்டிப்பா ஜெயிப்போம்னு நினைச்சிட்டு இருக்காங்க. வேட்பாளர்கள் மீதான அதிருப்தியாளர்கள் பலரும், அவரு எப்படியும் தோத்துப் போயிடணும்னு பிரார்த்தனை செஞ்சிட்டு இருக்காங்க. அதனால, வெற்றிக் கொண்டாட்டத்துக்கு இதுவரைக்கும் எந்த ஏற்பாடும் செய்யலை.
ஓட்டுப்பதிவு முடிஞ்ச பிறகு, கட்சி ஆபீஸ் பக்கமே எட்டிப் பார்க்காத வேட்பாளர், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த நாள் விழாவுக்கு, அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா வந்ததும், அவருடன் சேர்ந்து வந்தது, கட்சிக்காரங்களுக்கு மனநெருடலா இருந்திருக்கு,''
ஒரு டன் மலர் மாலை
''தாமரைக்கட்சி சைடுல கருத்துக்கணிப்பு சாதகமா வந்திருக்கிறதுனால, கொண்டாட்டத்துல இருக்காங்க. ஓட்டு எண்ணிக்கை முடிஞ்சதும், வெற்றி விழா கொண்டாடுறதுக்கு தடபுடல் செஞ்சிருக்காங்களாம். ஒரு டன் எடைக்கு, பிரம்மாண்ட மாலைக்கு ஆர்டர் கொடுத்திருக்காங்க. ஒவ்வொரு ஏரியாவுலயும் சரவெடி வெடிக்கறதுக்கும், இனிப்பு பரிமாறவும் ஏற்பாடு செஞ்சிருக்காங்க. ஓட்டு எண்ணிக்கை நிலவரத்தை தெரியறதுக்கு, பாரதி பார்க் அஞ்சாவது கிராஸ் நான்கு வீதி சந்திப்புல பிரம்மாண்ட எல்.இ.டி., திரை, மைக் அமைச்சிருக்காங்க. இதே மாதிரி கட்சி ஆபீசிலும் ஏற்பாடு செஞ்சிருக்காங்க,''
சாக்லேட் கொண்டு வரலாம்
''பிஸ்கட் பாக்கெட், சாக்லெட் கொண்டு வரலாம்னு, சொல்லி இருக்காங்களாமே...''
''அதுவா... ஓட்டு எண்ணிக்கையை கண்காணிக்கறதுக்கு ஒவ்வொரு டேபிளுக்கும், வேட்பாளர்கள் சார்புல முகவர்கள் நியமிச்சிருக்காங்க.
டீ, காபி, ஸ்நாக்ஸ், டிபன், சாப்பாடு ஏற்பாடு செஞ்சிருக்காங்க. இருந்தாலும், 'சுகர் கம்ப்ளைன்ட்' இருக்கறவங்க, பிஸ்கட் பாக்கெட், சாக்லெட் எடுத்துட்டு வரலாம்னு சொல்லியிருக்காங்க.
அதை பறிமுதல் செய்யக்கூடாதுன்னு நுழைவாயில்ல இருக்கற, போலீஸ்காரங்களுக்கு 'அட்வைஸ்' பண்ணியிருக்காங்க,'' என்றபடி, நகர் வலம் செல்ல, ஸ்கூட்டரை ஸ்டார்ட் செய்தாள் சித்ரா.
கார்ப்பரேஷன் வசூல் ராணி
பின்இருக்கையில் அமர்ந்து கொண்ட மித்ரா, ''கார்ப்பரேஷன் ஆபீசர்கள்ல யாரு அதிகமா சம்பாதிக்கிறதுன்னு போட்டி நடக்குதாம். இப்போதைக்கு கிழக்கு மண்டலத்துல இருக்கற ஒரு லேடி 'நம்பர் ஒன்'னா இருக்காங்களாம். வசூலுக்காகவே ரெண்டு பேரை நியமிச்சிருக்காங்க. அந்த ரெண்டு பேரும், 20 வார்டு பில் கலெக்டர்கள்கிட்ட வசூலிச்சு, யார் யார் எவ்ளோ கொடுத்தாங்கன்னு லிஸ்ட் போட்டு கொடுக்குறாங்க,''
''அந்த ரெண்டு பேருக்கும், டவுன் பிளானிங் கிளார்க் வேலையும் சேர்த்துக் கொடுத்திருக்காங்க. அதனால, புது பில்டிங் கட்டுறதுக்கு கமிஷன் வாங்குறதுக்கும், கலெக்சன் ஏஜன்டா இருக்காங்க. இதுல இன்னொரு கொடுமை நடந்திருக்கு.
கொத்தடிமை மாதிரி, பில் கலெக்டரா இருக்கற ஒரு லேடி, தெனமும் ஆபீசர் வீட்டுக்கு போயி, வீட்டு வேலை செஞ்சு, சமைச்சுக் கொடுக்குறாராம். அதனால, அந்த லேடி பில் கலெக்டருக்கு கூடுதலா, ஒரு வார்டு ஒதுக்கி இருக்காங்க,''
''இதுக்கு முன்னாடி பணியாற்றிய ஆபீசர்ஸ், ஒரு கட்டடத்துல எத்தனை வரி விதிப்பு இருந்தாலும், ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்குவாங்களாம். இப்ப இருக்கிற ஆபீசர், ஒரு கட்டடத்துல அஞ்சு வரி விதிப்பு இருந்தாலே, தலா ஆயிரம் ரூபாய் கணக்குப்போட்டு, அஞ்சாயிரம் ரூபா கேட்குறாராம். விண்ணப்பதாரரை அழைச்சு பேசுறதில்லையாம்; பதிவு பெற்ற இன்ஜினியர்களை வரச்சொல்லி, 'டீல்' பேசுறாராம்,''
'என்கொயரி' ஆரம்பம்
''அதெல்லாம் இருக்கட்டும். ஹைவேஸ் டிபார்ட்டுமென்ட்டுல, இன்ஜினியர்களே, கான்ட்ராக்டர்களா மாறி, வேலை செஞ்சதா, கம்ப்ளைன்ட் கிளம்பி இருக்கே... விசாரிச்சியா...''
''உண்மைதான்க்கா... சின்னச் சின்ன கான்ட்ராக்டர்கள் பெயரில, ரோடு வேலை எடுத்திருக்காங்க. அங்கங்கே 'டச்அப்' வேலை மட்டும் செஞ்சிட்டு, மேலிடத்துக்கு 30 சதவீத கமிஷன், கான்ட்ராக்டருக்கு 10 சதவீதத் தொகையைக் கொடுத்துட்டு, 50 சதவீத பணத்தை அமுக்கிட்டாங்களாம்; 'என்கொயரி' நடந்துட்டு இருக்குது,''
''இதுல, என்ன கொடுமைன்னா... 'என்கொயரி' செய்ற ஆபீசர்ஸ்க்கும் பங்கு போகுதுங்கிறதுனால, விசாரணைங்கிற பேர்ல கண்துடைப்பு நாடகம் நடத்துறதா, கான்ட்ராக்டர்ஸ் புலம்புறாங்க.
உக்கடம் மேம்பாலம், அவிநாசி ரோடு மேம்பால வேலையிலும் 'குவாலிட்டி' குறைஞ்சிடுச்சுன்னு சொல்றாங்க. ஒப்பந்தத்துல இருக்கற மாதிரி வேலை செய்யாம, ஒதுக்குன நிதியை அமுக்கறதுக்கு, இன்ஜினியர்கள் துணை போறதாவும், புகார் கெளம்பியிருக்கு,''
''தி.மு.க., ஆட்சிக்கு வந்ததுல இருந்து, நம்மூர்ல 'ரெஸ்டாரேஷன்' ஒர்க்குகளை பட்டியல் எடுத்து, ஒரு கமிட்டி அமைச்சு ஆய்வு செஞ்சா... ஏகப்பட்ட வேலைகள் செய்யாமலேயே பணம் எடுத்திருக்கறதும் படுமோசமான தரத்துல வேலை நடந்திருப்பதும் தெரியும்னு சொல்றாங்க... இதெல்லாம் விஜிலென்ஸ் டிபார்ட்மென்ட் கவனத்துக்கு போகாது போலிருக்கு,''
கமிஷனர் அலுவலகத்துக்குள், ஸ்கூட்டரை ஓரங்கட்டி நிறுத்தி விட்டு, கேன்டீனுக்குள் நுழைந்த சித்ரா, ''போலீஸ் டிபார்ட்மென்ட்டுல நில அபகரிப்பு தடுப்பு பிரிவு செயல்படுது. நிலம் அபகரிப்பு சம்பந்தமா ஏகப்பட்ட கம்ப்ளைன்ட் வருது; கலெக்டர் ஆபீசுல இருந்தும் ரெக்கமண்ட் பண்ணி அனுப்புறாங்க.
பெயரளவுக்கு சில கேஸ் மட்டும் பதியுறாங்க. விசாரணைய துரிதப்படுத்தாம இழுத்தடிக்கிறதுனால, பத்திரப்பதிவு துறையில போலி டாக்குமென்ட் காண்பிச்சு, நிலத்தை பதிவு செய்றது ஜாஸ்தியாகிட்டு இருக்குதாம்,''
டபுள் புரமோஷன்
''இன்னொரு விஷயம் கேள்விப்பட்டேனே... போலீஸ்ல ஒரு ஆபீசர் குறுக்கு வழியிலே டபுள் புரமோஷன் வாங்கியிருக்காராமே...''
''ஆமாப்பா... அதைப்பத்தி விசாரிச்சேன். கோவையில் அந்த ஆபீசர் இருக்காரு; எஸ்.ஐ.,யா டூட்டியில ஜாயின் பண்ணியிருக்காரு. ரெட்டை பதவி உயர்வு வாங்கி, உயரதிகாரியா இருக்காராம்.
இவரை பதவியிறக்கம் செய்யணும்னு கோர்ட்டுக்கு போயி, ஆர்டர் வாங்கிட்டு வந்திருக்காங்க. இந்த ஆர்டரை அமல்படுத்தக் கூடாதுன்னு, மிகப்பெரிய தொகையை, மேலிடத்துக்கு 'கப்பம்' கட்டிட்டு இருக்காராம்,''
ஆபீசரை பார்க்கவே லஞ்சம்
''எனக்கொரு ஒரு ஆபீசரை பத்தி தெரியும்; சொல்லட்டுமா,'' என்ற மித்ரா, ''பாரஸ்ட் ஆபீசுல இருக்கற உயரதிகாரியை சந்திக்கிறதுக்கு, 'அப்பாயின்மென்ட்' வாங்குறது குதிரை கொம்பா இருக்குதாம். யாராச்சும் போயி, 'ஐயா, ஆபீசரை பார்க்கணுங்கய்யா...'ன்னு கேட்டா, ரெண்டாயிரம் ரூபாய் லஞ்சம் கேக்குறாங்களாம்,''
''லஞ்சம் கொடுக்கலைன்னா, ஆபீசரை பார்க்கவே விடுறதில்லையாம். ஓய்வு பெற்ற அலுவலர்கள் பலரும், பணப்பயன் வாங்குறதுக்கு எத்தனை தடவை நடையாய் நடந்தாலும், ஏதாச்சும் சொத்தை காரணத்தைச் சொல்லி, திருப்பி அனுப்பிடுறாங்களாம். அலுவலகத்துக்குள்ள என்ன நடக்குதுன்னே அந்த ஆபீசர் இருக்காரேன்னு நினைச்சு, வனத்துறையினர் 'அப்செட்'டுல இருக்காங்க,'' என்றாள்.
செனட் கூட்டத்தில் 'காச்மூச்'
பார்க்கிங் ஏரியாவில் நின்றிருந்த ஆபீசரிடம் சித்ரா பேசி விட்டு வந்ததும், கமிஷனர் ஆபீசில் இருந்து ஸ்கூட்டரில் இருவரும் வெளியேறினர். செஞ்சிலுவை சங்கம் ரவுண்டானா அருகே, கல்வித்துறை ஜீப் கடந்து சென்றது.
அதை கவனித்த சித்ரா, ''பாரதியார் யுனிவர்சிட்டியை பத்தி, ஒரு தகவல் எனக்குத் தெரியும்; அதை சொல்றேன் கேளு. கடைசியா நடந்த செனட் கூட்டத்துல, ஆடிட்டிங் சம்பந்தமான கோப்புகள்ல சிக்கல் இருக்கறதாச் சொல்லி, மெம்பர்ஸ் வாக்குவாதம் செஞ்சிருக்காங்க. அதனால, கூட்டத்தை ஒத்திவைச்சிருக்காங்க,''
''இதே மாதிரி ஒவ்வொரு வருஷமும், நிதியாண்டு முடியுற சமயத்துல செனட் கூட்டம் நடத்தி, மெம்பர்கள்ட்ட ஒப்புதல் வாங்கிய பிறகே, வரவு - செலவு கணக்கை 'பைனல்' பண்ணுவாங்க. கடந்த நிதியாண்டுல கூட்டம் நடத்தாமலேயே, கணக்கு முடிச்சிருக்கிற தகவல் வெளியாகி இருக்கு.
ஏன்னா... கூட்டம் நடத்தாமலேயே, மெம்பர்களுக்கு, அதுல பங்கேற்றதுக்காக தொகை வழங்கியிருக்காங்களாம். இந்த மாசம் நடத்துற கூட்டத்துல, அந்த தொகையை திருப்பிக் கொடுக்கறதுக்கு, சில மெம்பர்ஸ் பிளான் பண்ணியிருக்காங்க,''
''பள்ளி கல்வித்துறை அலுவலக ஊழியர்களை, ஒரு ஆபீசர் 'வார்னிங்' பண்ணியிருக்காராமே...''
''அதுவா... தொடக்கக் கல்வி அலுவலகத்துல, எதுக்கெடுத்தாலும் லஞ்சம் கேட்குறாங்களாம். எய்டடு ஸ்கூல் பராமரிப்பு மானியம் விடுவிக்கறது, டீச்சர்ஸ்க்கு நிலுவை தொகை கொடுக்கறதுக்கு கரன்சியை காட்டலைன்னா, அடுத்த டேபிளுக்கு பைல் போகாதாம். அஞ்சாயிரத்துல ஆரம்பிச்சு, இருபதாயிரம் வரைக்கும் கேக்குறாங்களாம்,''
''இதைக்கேள்விப்பட்ட எஜூகேஷன் டிபார்ட்மென்ட் அஞ்செழுத்து ஆபீசர் ஒருத்தர், தொடக்க கல்வி அலுவலர்களை கூப்பிட்டு, 'வார்னிங்' குடுத்திருக்காரு.
விஜிலென்ஸ் ஆபீசர்ஸ் எப்போ வேணும்னாலும் ஒங்க ஆபீசுக்கு வரலாம்; ஜாக்கிரதையா இருங்க. என்னால எதுவும் செய்ய முடியாதுன்னு சொல்லியிருக்காராம்,'' என்ற படி, ரேஸ்கோர்ஸ் சுற்றுவட்ட சாலையில், ஸ்கூட்டரை முறுக்கினாள் சித்ரா.