/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சுய சான்றளிப்பு திட்டத்தில் 125 பேருக்கு கட்டட அனுமதி
/
சுய சான்றளிப்பு திட்டத்தில் 125 பேருக்கு கட்டட அனுமதி
சுய சான்றளிப்பு திட்டத்தில் 125 பேருக்கு கட்டட அனுமதி
சுய சான்றளிப்பு திட்டத்தில் 125 பேருக்கு கட்டட அனுமதி
ADDED : செப் 05, 2024 12:30 AM
கோவை : கோவை மாநகராட்சியில் சுய சான்றளிப்பு திட்டத்தில், 125 விண்ணப்பதாரர்கள் கட்டட வரைபட அனுமதி பெற்றுள்ளனர். இவ்விண்ணப்பதாரர்களின் இடத்துக்கு, 15 நாட்களுக்கு காலியிட வரி நிர்ணயிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
கோவை மாநகராட்சியில் கட்டட அனுமதி கோரும் இனங்களுக்கு, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில், 2,500 சதுரடி வரை பரப்பளவுள்ள மனையில், 3,500 சதுரடி வரையிலான தரைத்தளம் மற்றும் தரைத்தளத்துடன் கூடிய முதல் தளம் குடியிருப்பு கட்டடம் கட்டுவதற்கு சுய சான்றளிப்பு அடிப்படையில், இணைய வழியில் அனுமதி அளிக்கப்படுகிறது.
இவ்வகையில், இதுவரை, 125 விண்ணப்பங்கள் பெறப்பட்டு, அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இவை மண்டலம் வாரியாக பிரிக்கப்பட்டு, சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்கள் சரியானவை தானா என, ஆய்வு செய்யும் பணியில், நகரமைப்பு பிரிவினர் ஈடுபட்டுள்ளனர்.
சுய சான்றளிப்பு திட்டத்தில், அனுமதி பெறப்பட்ட கட்டடங்களுக்கான நில உரிமையை, 15 நாட்களுக்குள் நகரமைப்பு பிரிவினர் சரிபார்க்க வேண்டும். 30 நாட்களுக்கு காலியிட வரி வசூலிக்க வேண்டும்.
பாதாள சாக்கடை திட்டத்துக்கான, வைப்புத் தொகை பொறியியல் பிரிவு மூலமாக, 30 நாட்களுக்குள் வசூலிக்க வேண்டும். ஏழு மீட்டர் உயரத்துக்கு உட்பட்ட கட்டுமானம் என்பதை உறுதி செய்ய வேண்டும்.
இதில் குறைபாடு கண்டறிந்தால், கட்டட வரைபட அனுமதியை உடனடியாக ரத்து செய்ய, நகரமைப்பு பிரிவினர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, நகராட்சிகளின் நிர்வாக இயக்குனர் சிவராசு உத்தரவிட்டுள்ளார்.
மாநகராட்சி நகரமைப்பு பிரிவினர் கூறுகையில், 'சுய சான்று திட்டத்தில் வரைபட அனுமதி பெற்ற விண்ணப்பங்களின் ஆவணங்கள் இனி சரிபார்க்கப்படும்.
அனுமதியற்ற மனைப்பிரிவா; திட்டச்சாலை அமையும் இடங்களில் விண்ணப்பித்திருக்கிறார்களா; விதிமீறல் கட்டடத்துக்கு விண்ணப்பம் செய்துள்ளார்களா என, கள ஆய்வு செய்யப்படும்.
மண்டலம் வாரியாக விண்ணப்பம் பிரித்து உதவி பொறியாளர்கள் மூலம் ஆய்வு செய்து, தவறு இருந்தால் ரத்து செய்யப்படும்' என்றனர்.