/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
விதைப்பண்ணை அமைக்கலாம் வாங்க! ஆதிதிராவிட விவசாயிகளுக்கு அழைப்பு
/
விதைப்பண்ணை அமைக்கலாம் வாங்க! ஆதிதிராவிட விவசாயிகளுக்கு அழைப்பு
விதைப்பண்ணை அமைக்கலாம் வாங்க! ஆதிதிராவிட விவசாயிகளுக்கு அழைப்பு
விதைப்பண்ணை அமைக்கலாம் வாங்க! ஆதிதிராவிட விவசாயிகளுக்கு அழைப்பு
ADDED : செப் 12, 2024 08:44 PM
பொள்ளாச்சி : ஆதிதிராவிடர் விவசாயிகள் விதைப்பண்ணைகள் அமைத்து பயன் பெறலாம், என, வேளாண்துறை வாயிலாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்ட வேளாண் இணை இயக்குநர் வெங்கடாசலம் அறிக்கை வருமாறு:
கோவை மாவட்டத்தில், சம்பா மற்றும் தாளடி பருவத்தில் சராசரியாக 1,487 ஏக்கர் பரப்பில் நெற்பயிரும், ராபி பருவத்தில், 35 ஆயிரம் ஏக்கர் பரப்பில் சிறுதானியங்கள், 16 ஆயிரம் ஏக்கர் பரப்பில் பயறு வகைகள், 2,625 ஏக்கர் பரப்பில் எண்ணெய் வித்து பயிர்கள் சாகுபடி செய்யப்படுகிறது.
சாகுபடி செய்யப்படும் பயிர்களில் கூடுதல் லாபம் பெறலாம். அதற்கு, வேளாண் துறையில் விதைப்பண்ணையாக பதிவு செய்து, களப்பணியாளர்களின் வழிகாட்டுதல் மற்றும் விதைச்சான்று துறையின் உயர் தொழில் நுட்பங்களை பின்பற்றி சாகுபடி செய்ய வேண்டும்.
அவ்வாறு செய்யும்போது, சராசரியாக கிடைக்கும் மகசூலை விட கூடுதல் மகசூல் ஈட்ட முடியும். அத்துடன் விதைப் பண்ணை வாயிலாக பெறப்படும் விதைகளுக்கு சந்தை விலையை விட அரசின் 'டான்சிடா' திட்டம் வாயிலாக கூடுதலான கொள்முதல் விலையை பெற முடியும். இதனால், விவசாயிகள் நல்ல வருவாய் கிடைக்கும்.
நடப்பாண்டு, விதைப்பண்ணை சாகுபடியை ஊக்குவிக்கும் வகையில், பயிர் வாரியாக ஆதிதிராவிடர்களுக்கென தனி ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, மாவட்ட மொத்த ஒதுக்கீட்டை ஒப்பிடுகையில், நெற்பயிரை பொருத்தமட்டில், 22.75 ஏக்கரில் 4.7 ஏக்கர்; சிறுதானியங்களில் 107 ஏக்கரில் 23.75 ஏக்கர்; பயறு வகை பயிர்களில் 314.5 ஏக்கரில் 60 ஏக்கர்; எண்ணெய் வித்து பயிர்களில் 125 ஏக்கரில் 20 ஏக்கர் ஆதிதிராவிட விவசாயிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அனைத்து பயிர்களிலும் மொத்த ஒதுக்கீடான, 569.25 ஏக்கரில், ஆதிதிராவிட விவசாயிகளுக்கென, 108.45 ஏக்கரில் (20 சதவீதம்) விதைப்பண்ணைகள் அமைத்து பயன்பெறலாம். அதிகபட்சமாக ஒரு விவசாயி ஐந்து ஏக்கர் மட்டுமே விதைப்பண்ணை அமைக்க பதிவு செய்ய வேண்டும்.
எனவே, நடப்பு பருவத்தில் நெல், சிறுதானியங்கள் மற்றும் எண்ணெய் வித்து பயிர்கள் சாகுபடி செய்யும் ஆதிதிராவிட விவசாயிகள், விதைப்பண்ணைகள் அமைக்க விரும்பும் பட்சத்தில், அருகில் உள்ள வட்டார வேளாண் விரிவாக்க மையத்தை அணுகலாம்.
மேலும், உதவி விதை அலுவலர்கள் மற்றும் வேளாண் உதவி இயக்குநர் ஆகியோரை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.